ஆட்டோமேட்டிக் கேமிராக்கள் பொருத்தி புலிகளை கணக்கெடுக்க முடிவு | Tiger census srarted | cuddalore
தமிழகத்தில் உள்ள முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில் ஆண்டு தோறும் புலி மற்றும் சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது. பிற வனக்கோட்டங்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தாண்டு முதல் தமிழக வனக் கோட்டங்களில் ஆண்டு தோறும் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கூடலூர் வனக்கோட்டத்தில் ஆட்டோமேட்டிக் கேமிராக்கள் பொருத்தி புலிகள் மற்றும் சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் துவக்கினர். இதற்கான பயிற்சி முகாம் நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவரவியல் மையத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பயிற்சி உதவி வன பாதுகாவலர் அருண்மொழி வர்மன் தலைமை வகித்தார். வன உயிரியியலாளர்கள் சந்தோஷ், விமல், கார்த்திகா ஆகியோர் ஆட்டோமேட்டிக் கேமிராக்கள் மூலம் புலி மற்றும் சிறுத்தைகள் கணக்கெடுப்பு குறித்தும், ஆட்டோமேட்டிக் கேமிராக்கள் செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். முகாமில் வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார், சஞ்சிவ், ரவி, அய்யனார் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றனர். வனத்துறையினர் கூறுகையில், கூடலூர் வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்புக்காக 105 இடங்களில் ஆட்டோமேட்டிக் கேமிராக்கள் பொருத்தும் பணி நாளை முதல் தூங்கப்படும். கேமிராக்களும் பொருத்தும் பணி முடிவு பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்கு கணக்கெடுப்பு பணி நடைபெறும், என்றனர்.