இரண்டு பேர் கைது - சொகுசு கார் பறிமுதல் | Black magic trick crime| Erode
இரண்டு பேர் கைது - சொகுசு கார் பறிமுதல் / Black magic trick crime/ Erode ஈரோடு தபோவனம் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. வயது 61. கணவர் இறந்த நிலையில் தனியாக வசிக்கிறார். ருக்குமணிக்கு இரண்டு மகள் மற்றும் மகன் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் இரண்டு ஆசாமிகள் கோடாங்கி போல் வேஷமிட்டு ருக்மணி வீட்டிற்கு சென்றனர். வீட்டில் பில்லி சூனியம் இருப்பதாகவும் அதனால் அவரது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து வரும் என்றும் குடுகுடுப்பு அடித்து கூறினர். அதிர்ச்சி அடைந்த ருக்மணி அதற்கு பரிகாரம் கேட்டார். பில்லி சூனியத்தை முறித்து பிள்ளைகள் உயிருக்கு பாதிப்பு வராமல் இருக்க பூஜைகள் செய்ய வேண்டும். அதற்கு பல லட்சம் தேவைப்படும் என திருட்டு ஆசாமிகள் கூறினர். இதை நம்பிய ருக்குமணி வீட்டில் இருந்த 16 லட்சம் ரூபாய் மற்றும் ஐந்தரை பவுன் நகையை திருட்டு ஆசாமிகளிடம் கொடுத்தார். பணம், நகையை பெற்று கொண்ட ஆசாமிகள் ஓட்டம் பிடித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ருக்மணி புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் கூறினார். போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த குழந்தைவேலு மற்றும் வீரமணி ஆகியோர் ருக்மணியை ஏமாற்றி பணம் பறித்தது உறுதியானது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். ருக்மணியிடம் கொள்ளையடித்த 16 லட்சம் ரூபாயில் ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு வீடு வாங்கியது உறுதியானது. போலீசார் சொகுசு கார் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர். குழந்தைவேலு மற்றும் வீரமணி மீது ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. இதுபோல திருட்டு ஆசாமிகளிடம் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏமாறக் கூடாது என போலீசார் எச்சரித்தனர்.