மதுரையில் ஐவர் கும்பல் கைது | 2 kg Gold theft | 5 accused arrested | Madurai
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் வயது 60. இவர் தங்க நகையை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவர் கடந்த நவம்பர் 23ம் தேதி சென்னையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்க நகைகளுடன் பாண்டியன் ரயிலில் மதுரை வந்தார். ரயில்வே ஸ்டேஷன் முன்பு காத்திருந்த ஐவர் கும்பல் பாலசுப்பிரமணியனை நகைகளுடன் காரில் கடத்தி மேலுார் அருகே கிடாரிபட்டி கிராமத்திற்கு சென்றனர். அங்கு அவரை தாக்கி விட்டு 2 கிலோ நகைகளை கொள்ளையடித்து காரில் ஏறி தப்பினர். அப்பகுதி மக்கள் உதவியுடன் பாலசுப்பிரமணியன் மதுரை வந்தார். திலகர்திடல் போலீசில் புகார் கூறினார். போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடினர். ரயில்வே ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். விசாரணையில் பாலசுப்பிரமணியன் சென்னை சவுக்கார் பேட்டையில் அடிக்கடி நகை வாங்கி வந்ததை நோட்டமிட்ட மற்றொரு நகை புரோக்கர் நாகேந்திரன் கொள்ளையின் மூளையாக செயல்பட்டது உறுதியானது. இவரது துாண்டுதல் பேரில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே சரிகுவலையப்பட்டியை சேர்ந்த பாக்கிராஜ், நெல்லை நாங்குநேரி அருகே மேல காடுவெட்டி பகுதியை சேர்ந்த முத்து மணிகண்டன், மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் ஆகியோர் பாலசுப்பிரமணியனிடம் 2 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது உறுதியானது. மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ நகைகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான நகை புரோக்கர் நாகேந்திரன் மற்றும் கூட்டாளி செல்லப்பாண்டியை தேடுகின்றனர். தனிப்படை போலீசாரை துணை கமிஷனர் விருது வழங்கி பாராட்டினார்.