உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றிய கேரளா | Kanyakumari | Kerala dogs in Tamil Nadu

தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றிய கேரளா | Kanyakumari | Kerala dogs in Tamil Nadu

தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றிய கேரளா / Kanyakumari / Kerala dogs in Tamil Nadu கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள், மாமிச கழிவுகளை டன் கணக்கில் லாரி லாரியாக ஏற்றி தமிழகத்திற்கு கடத்தி வந்து கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கொட்டி வருவது வழக்கமாகமான ஒன்றாகி விட்டது. கேரள மருத்துவக் கழிவுகளை கன்னியாகுமரி குளங்களில் டன் கணக்கில் கொட்டி விட்டு சென்ற லாரியை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதேபோல் கோவையிலும் கழிவுகளை கொட்டும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதையடுத்து கேரளா மற்றும் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கேரள கழிவுகளை கேரளாவிற்கே அனுப்பி, அங்கு முறைப்படி சுத்திகரிப்பு செய்து அழிக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கேரள மருத்துவ கழிவுகள் லாரிகளில் ஏற்றி மீண்டும் கேரளாவிற்கே அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக பூமியை நாசமாக்கும் இக்கொடூர சம்பவம் நடந்து முடிவதற்குள் அடுத்தகட்டமாக கேரளாவில் சுற்றித்திரியும் சொறி பிடித்து தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களை வேனில் ஏற்றி வந்து கன்னியாகுமரி பகுதியில் விடுவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 20 க்கும் மேற்பட்ட சொறிப்பிடித்த தெரு நாய்களுடன் குமரி மாவட்ட எல்லையில் ஆள்நடமாட்டம் இல்லாத கட்டச்சல் பகுதியில் கேரள பதிவெண் கொண்ட வேன் நின்றது. வேனில் இருந்து நாய்கள் அவிழ்த்து விடப்பட்டன. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேனை சிறைப்பிடித்தனர். அவர்கள் விடுவித்த நாய்களை அவர்கள் மூலமே மீண்டும் பிடிக்க வைக்கப்பட்டனர். தெருநாய்களுடன் வேனை மடக்கி பிடித்து கடையாலுமூடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் குமரி மாவட்ட எல்லையில் நாய்களுக்கு ஊசி போட கொண்டு செல்வதாக நாடகம் ஆடினர். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகளை குமரி எல்லையில் கொட்டப்படுவதை தொடர்ந்து தற்போது நாய்களை கொண்டு விட முயற்சித்த சம்பவம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. நாய்களை தமிழகத்தில் விட முயன்ற வேன் உரிமையாளருக்கு கடையால் பேரூராட்சி நிர்வாகம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. பிடிப்பட்ட நபர்களிடம் நாய்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து களியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் பால், முட்டை, மளிகை, காய்கறி அரிசி உள்ளிட்ட வாகனங்களை கேரள போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்கின்றனர். கேரளாவிற்குள் நுழையும் பொருட்கள் நல்ல பொருளா, காலாவதியான பொருளா என அனைத்து பரிசோதனைகளுக்கும் உட்படுத்துகின்றனர். நல்ல பொருட்கள் தான் என பரிசோதனை முடிவுகளை வைத்து கேரளாவிற்குள் நுழைய விடுகின்றனர். ஆனால் கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள், மாமிச கழிவுகளை டன் கணக்கில் லாரி லாரியாக தமிழகம் கடத்தி வரப்படுவதை கண்டு கொள்வதில்லை. இப்பிரச்னைக்கு இருமாநில முதல்வர்கள் நிரந்தர தீர்வு காண வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இருந்து மருத்துவ கழிவுகள், மாமிச கழிவுகள் டன் கணக்கில் கேரளாவிற்கு அனுப்பும் போராட்டம் நடைபெறும். மருந்து, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கேரளாவிற்கு செல்ல விடமாட்டோம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை