மதுரை அருகே செம்பூரில் புதிய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
மதுரை அருகே செம்பூரில் புதிய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு | New Jail on 89 acres | commencement of land survey work | Peoples Protest | Madurai மதுரை அரசரடியில் 1252 கைதிகள் அடைக்கும் வகையில் கடந்த 1875ம் ஆண்டு 31 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறைச்சாலை செயல்பட்டு வருகின்றது. கைதிகளின் அதிகரிப்பு, இடநெருக்கடி மற்றும் பாதுகாப்பு காரணமாக புதிய சிறைச்சாலை அமைக்க ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே செம்பூர் பகுதியில் 89 ஏக்கர் பரப்பளவில் மதுரை மத்திய சிறைச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்தை சர்வே செய்யும் பணி துவங்கியது. அங்கு ஆண், பெண் கைதிகள் மற்றும் சிறைப் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை துவக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செம்பூர் கிராம மக்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் சிறை அமையவுள்ளது. நாங்கள் விவசாயம் செய்கிறோம். அமையவுள்ள சிறைச்சாலை பகுதியில் தான் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வோம். பல்வேறு உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன. சிறைச்சாலையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பல உயிரினங்களும் அழியும். எனவே மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய சிறைச்சாலை அமைக்க மதுரை வாடிப்பட்டி அருகே கச்சகட்டி பகுதியில் இடம் தேர்வானது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்கள் நடத்தியதால் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மேலுார் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக செம்பூரில் புதிய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும். தாமதித்தால் செம்பூர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட வேண்டியிருக்கும் என செம்பூர் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.