₹20,000 மாத வாடகை அம்போ | PWD office encroachment | Enquiry going | Madurai
மதுரை தல்லாகுளம் கர்னல் ஜான் பென்னிகுக் வளாகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலகங்கள் உள்ளது. இங்கு மண்டல தலைமை பொறியாளர், கோட்ட செயற்பொறியாளர், உதவி கோட்ட செயற்பொறியாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. பென்னிகுக் வளாகத்தில் பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர்களுக்கு காத்திருப்பு அறை ஒதுக்கப்பட்டது. இதன் மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கலாம். ஆனால் இலவசமாக அறை ஒதுக்கப்பட்டது. இங்கு டிவி, கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின், பிரிண்டர் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் பயன்படுத்த அனுமதியில்லை. காலை 10 முதல் இரவு 7 மணி வரை மட்டுமே அறையை பயன்படுத்தலாம். பொதுப்பணித்துறை அலுவலக வளர்ச்சிப் பயன்பாட்டிற்கு தேவை ஏற்பட்டால் அறை ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் உள்ளிட்ட கண்டிஷன்களுடன் அறை ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த அறையை கான்ட்ராக்டர்களின் ஒரு பிரிவினர் ஆக்கிரமிப்பு செய்து விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஜான் பென்னிகுக் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் மண்டல தலைமை பொறியாளர் செல்வராஜிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த தலைமை பொறியாளர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோட்ட செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை அறையை விதிமீறி பயன்படுத்தி வருவதாக எழுந்த புகார் கான்ட்ராக்டர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.