முதல்வர் ஸ்டாலின் போல் திடீர் விசிட் எப்போது? | Woe to Amma Restaurants | Madurai
மதுரையில் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள அம்மா உணவகங்கள் பல மோசமான நிலையில் உள்ளன. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தது போல் மதுரையிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு செய்து உணவகத்திற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். மதுரை தெப்பக்குளம் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்திற்குள் நுழைய முடியாபடி புதர் மண்டியுள்ளது. பேவர் பிளாக் கற்களுக்கு பதில் உடைந்த கற்களை கொட்டி பாதையை உருவாக்கியுள்ளனர். வாழ்க்கையில் அடிபட்டுதான் சாப்பிட வேண்டும் போல் என நொந்து போகும் வகையில் உணவகத்திற்குள் உடைந்த டைல்ஸ் கற்கள் சாப்பிடுவோரின் பாதங்களை குத்தி காண்பிக்கின்றன. இன்னும் ஸ்பெஷல் அயிட்டங்கள் எல்லாம் இருக்கு என்று சொல்வது போல் ஓடாத மின் விசிறி, உடைந்த டேபிள், ஆர்.ஒ., பிளான்ட் என தோசையை அடுக்கி வைப்பது போல் அடுக்கும் அளவிற்கு அவ்வளவு பிரச்னைகள் அங்குள்ளன. சமையலறையை எட்டிபார்த்தால் சாப்பிடவே தோன்றாது. எங்கு பார்த்தாலும் எலி பொந்துக்கள், சேதமடைந்த தரை, கழிவுநீர் தேக்கம், உடைந்த மேற்கூரை என உமட்டல் வரும் வகையில் பரிதாபமாக இருக்கிறது அம்மா உணவகம். இங்கு 12 பெண்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். முன்பு அதிகாலை 4:30 மணிக்கே வந்து ஆர்வத்துடன் வேலை பார்த்தவர்கள் இன்று பயம் காரணமாக பொழுதுவிடிந்த பிறகு தான் வருகிறார்கள். கூட்டமும் அந்தளவிற்கு வருவதில்லை. 15 கிலோவுக்கு பதில் 7 கிலோ அரிசி தருவதால் கொஞ்சமாக இட்லி தயாரித்து தருகிறார்கள். தோசை பொங்கலுக்கு தட்டுப்பாடில்லை. ஆர்.ஓ., பிளான்ட் பழுதால் குடிநீர் இல்லை. நான்கு நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரை பிடித்து பயன்படுத்துகின்றனர். சமையல் அறை சுவர் எந்நேரத்திலும் விழலாம். எலி பொந்துகள் அதிகம். எலிகளை பிடிக்க பாம்புகள் படையெடுக்கின்றன. இதனால் அச்சத்துடனே பணிபுரிகின்றனர். கழிப்பறை இடம் மறைந்து போனதால் ஊழியர்கள் அருகில் உள்ளவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரை காக்க உணவு சமைத்து வழங்கி வருகிறார்கள். மதுரை அரசு மருத்துவமனை உணவகத்தில் பத்தாண்டுக்கும் மேலான பழுதான காஸ்ஸ்டவ் தான் பயன்படுத்துகின்றனர். அதில் உள்ள பர்னர் ஒரு பக்கம் விலகி நிதானமின்றி எரிகிறது. சிலிண்டரில் இருந்து வரும் டியூப்பில் கசிவு இருப்பதால் அதை பாலித்தீன் கவரால் சுற்றி பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பில்லாமல் சமையல் செய்வதால் ஸ்டவ் பர்னரையும், சிலிண்டர் டியூப்பையும் மாற்ற வேண்டும். பெண் பணியாளர்கள் விடுமுறையின்றி தினமும் 325 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கின்றனர். போக்குவரத்திற்கு கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது. இவர்களுக்கு தினமும் 500 ரூபாய் சம்பளம் தர மாநகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். மதுரையில் செயல்படும் அம்மா உணவங்களின் அவலங்கள் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து மதிமுக எம்எல்ஏ பூமிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா ஆய்வு செய்தனர். பழுதான அம்மா உணவங்கள் பராமரிக்கப்படும் என தெரிவித்தனர்.