வழக்கு தானே, உயிரா போயிடும் என பேசும் ஆடியோ வெளியானது
வழக்கு தானே, உயிரா போயிடும் என பேசும் ஆடியோ வெளியானது | Tirunelveli | Brake inspector purchased from GPay திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் லூதர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம். இவர் 2024 மார்ச்சில் இன்னோவா கார் வாங்கினார். திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக பதிவு செய்து ஓட்டி வந்தார். நிரந்தர பதிவிற்காக வாகன பதிவு சான்று கட்டணம், ஆயுள் கால வரி, தாமத கட்டணம் சேர்த்து 4 லட்சத்து 35,490 ரூபாய் கட்டணமாக செலுத்தினார். வள்ளியூர் மோட்டார் செக்கிங் இன்ஸ்பெக்டர் பெருமாள் வாகனத்தை ஆய்வு செய்தார். சான்றிதழ் தர 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். தொகை அதிகமாக இருக்கிறது என சுரேஷ் பாக்கியம் அவரது 1 வது வார்டு கவுன்சிலரான நண்பர் லாரன்ஸ் மூலம் பெருமாளிடம் பேசினார். பெருமாள் கடைசியாக 15,000 ரூபாய் வேண்டும் என அடம்பிடித்தார். சுரேஷ் பாக்கியம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பெருமாள் கூறிய எண்ணிற்கு கூகுள் பே மூலம் 10,000 ரூபாயை கடந்த 28ம் தேதி அனுப்பினார். மீதமுள்ள 5 ஆயிரம் ரூபாயை தருவதாக கூறினார். ஆனால் மீதமுள்ள 5 ஆயிரம் ரூபாயை தந்தால் தான் ஆர்.சி. புக்கை தருவேன் என பெருமாள் கரார் காட்டினார். சுரேஷ் பாக்கியம் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்பி மெக்லரின் எஸ்காலிடம் புகார் கூறினார். சுரேஷ் பாக்கியத்தின் நண்பரான கவுன்சிலர் லாரன்ஸ் என்பவர் செக்கிங் இன்ஸ்பெக்டர் பெருமாளிடம் பேசிய 2 ஆடியோக்களையும் ஒப்படைத்தார். அதில் செக்கிங் இன்ஸ்பெக்டர் பெருமாள் 40 லட்சம் செலுத்தி கார் வாங்க முடிகிறது. 20 ஆயிரம் ரூபாய் தர முடியாதா என கேட்பதும், என் மீது வழக்கு தானே போடுவார்கள் பார்த்துக்கொள்கிறேன் என்ன உயிரா போகப்போகுது என பேசியது தெரியவந்தது. ஆடியோக்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் செக்கிங் இன்ஸ்பெக்டர் பெருமாள் மீது வழக்கு பதிவு செய்தனர்.