நிர்ணயித்த சம்பளம் வழங்கக்கோரி தர்ணா | Sanitation workers dharna
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 150 துாய்மை பணியாளர்கள், 51 செக்யூரிட்டிகள் உட்பட 251 பேர் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 332 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி வழங்கக்கோரி பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் துாய்மை பணியாளர்களுக்கான தினக்கூலியை 725 ரூபாயாக உயர்த்தி, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும் சம்பளத்தை உயர்த்தி வழங்கவில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணியை புறக்கணித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு தற்காலிக பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்குள் உயர்த்திய சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என டீன் முருகேசன் உறுதியளித்ததால் பணியாளர்கள் கலைந்து சென்றனர்.