வேளாண் பல்கலை ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல் | Valan Champa Rice on the verge of extinction
வேளாண் பல்கலை ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல் / Valan Champa Rice on the verge of extinction / Trichy திருச்சி கோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இயற்கை விவசாயி. இவர் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் சோழர் காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்த வாலான் சம்பா நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார். குறிப்பாக அழிந்து போன அதிக சத்துமிக்க அரிசி ரகங்களை பயிரிட்டு மக்களுக்கு வழங்கி வருகிறார். பெண்களின் உடல் நலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பாரம்பரிய நெல் ரகமான வாலான் சம்பா நெல்லை தனது பெட்டவாய்த்தலை பரளி கிராமத்தில் உள்ள 4 ஏக்கரில் பயிரிட்டுள்ளார். ஆடிப் பெருக்கு கொண்டாட்டத்தின் போது, காப்பு அரிசி படையல் செய்து, நீர் நிலைகளில் புதுமண தம்பதியர் மற்றும் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்வர். வாலான் சம்பா அரிசியை நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து காப்பரிசி தயார் செய்யப்படும். வறட்சியை தாங்கி 150 நாளில் விளைச்சல் தரக்கூடியது இந்த நெல் ரகம் ஏக்கருக்கு 20 மூட்டை வரை மட்டுமே மகசூல் கிடைக்கும். 62 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் 2500 முதல் 3000 ரூபாய் வரையிலும், சந்தையில் ஒரு கிலோ வாலான் சம்பா அரிசி 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோடை காலத்திலும் அதிக காற்று வீசும் தருணத்தில் மற்ற நெற்பயிர்கள் விளைச்சல் தராது. கோடை வெப்பத்தையும் காற்றையும் தாங்கி வளரக்கூடிய வாலான் சம்பா நெல் இயற்கையின் பொக்கிஷம் என்கிறார் தர்மராஜ். பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பெரும்பாலான நோய்களை தீர்க்கும் பல்வேறு மகத்துவம் கொண்டது வாலான் சம்பா நெல். அழிவின் விளிம்பில் உள்ள இந்த ரகத்தை வேளாண் பல்கலை ஆய்வுக்கு உட்படுத்தி ஆடிமாதம் மட்டுமின்றி எல்லா காலங்களிலும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை விவசாயி தர்மராஜ் வலியுறுத்தினார்.