பூக்களே சற்று ஓய்வெடுங்கள்; அவள் வந்து விட்டாள்... அவள் வந்து விட்டாள்... |Miss kuvaagam 2025
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்; அவள் வந்து விட்டாள்... அவள் வந்து விட்டாள்... /Miss kuvaagam 2025/ koothandavar festival/ villupuram கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி கூத்தாண்டவர் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவர். இந்தாண்டு கூத்தாண்டவர் விழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நங்கை, நம்பியரை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகள் கலை விழா மற்றும் மிஸ் கூவாகம் அழகி போட்டி விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று பாட்டு, பரத நாட்டியம், கிராமிய நடனம் என தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். மிஸ்கூவாகம் 2025 அழகிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை பகுதிகளில் இருந்து பலர் பங்கேற்று கலக்கினர். இதில் 30 திருநங்கைகள் விதவிதமான உடைகளை அணிந்து ஒய்யாரமாக நடை நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இறுதி போட்டியாக இரண்டு சுற்றுகளில் தேர்வு செய்யபட்ட 15 திருநங்கைகள் ரேம்ப் வாக் வந்தனர். முதல் இடத்தை மாடலிங் செய்யும் திருநெல்வேலியை சேர்ந்த ரேணுகா பிடித்து மிஸ் கூவாகம் பட்டம் வென்றார். கள்ளக்குறிச்சியை சார்ந்த அஞ்சனா 2ம் இடம், கோயம்புத்தூரை சார்ந்த ஆஸ்திகா 3ம் இடம் பிடித்தனர். மூவருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 6 திருநங்கைகள் மற்றும் ஒரு திரு நம்பி என 7 பேருக்கு இளம் திருநங்கை சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 7 திருநங்கைகளுக்கு சிரிப்பழகி, ரேம்ப்வாக் அழகி, போட்டோகிராபிக் முகம், கட்டுக்கோப்பான உடல் என விருதும் வழங்கப்பட்டன.