ஆயுதங்களை கீழே போட நக்சல்களுக்கு சிஆர்பிஎப் அழைப்பு 22 Naxals Surrendered in Chhattisgarh | Bijapu
சத்தீஸ்கர் மற்றும் அதை ஒட்டிய அண்டை மாநில வனப்பகுதிகள் மற்றும் மலைகளில் பதுங்கியிருக்கும் நக்சல்களை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அடிப்படை கட்டமைப்புகளை எதிர்க்கும் நக்சல்கள், அப்பாவி மக்கள், அரசு ஊழியர்களை தாக்கியும், சில நேரங்களில் கொலை செய்தும் வருகின்றனர். நக்சல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீவிர கதியில் களம் இறங்கியுள்ளன. 2026 மார்ச் இறுதிக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். நாசவேலைகளை கைவிட்டு சரண் அடையும் நக்சல்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களும் அரசின் சார்பில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், சத்தீஸ்கரின் பீஜபூர் - தண்டேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்து தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த நக்சல்களை ஒடுக்கும் பணியில் சிறப்பு அதிரடிப் படை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் நக்சலைட்கள் - பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில், 26 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரர் பலியானார். அவர்கள் பயன்படுத்திய AK - 47 துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் இன்னும் பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல் கான்கேர் மாவட்டத்தில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை பிடிக்கும் பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் களம் இறங்கினர். சிஆர்பிஎப் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத 22 நக்சலைட்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு இன்று சரண் அடைந்தனர். இவர்களில் 6 பேர் தேடப்படும் நக்சலைட்கள் ஆவர். அவர்கள் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு சத்தீஸ்கர் அரசின் சார்பில் 11 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. சரண் அடைந்த நக்சலைட்களை பாராட்டிய சிஆர்பிஎப் டிஐஜி நெய்கி, அவர்களின் மறு வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். நக்சல் ஆதிக்கம் நிறைந்த, பஸ்தர், நாராயண்பூர், பீஜபூர், தண்டேவாடா பகுதிகளில், கூடுதலாக சிஆர்பிஎப் கேம்ப்கள் அமைத்து, சாலைகள் அமைத்தல், சுகாதார மையங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். நக்சல்களை ஒடுக்கும் பணி தொடரும், அரசுக்கு எதிராக செயல்படாமல், சரண் அடைந்து தேசிய நீரோடையில் கலந்தால், வளமான எதிர்காலம் கிடைக்கும் எனவும் நெய்கி உறுதி அளித்தார்.