பாகிஸ்தானில் LeT தளபதியை கருவறுத்தது யார்? திடுக் தகவல் Abu Qatal killed | LeT | India vs Pakistan
இந்தியா தேடிய பயங்கரவாத தளபதி பாகிஸ்தானில் வைத்தே கதை முடிப்பு யார் இந்த அபு கட்டா? பகீர் கிளப்பும் பின்னணி இந்தியாவால் மிகவும் தீவிரமாக தேடப்பட்டு வந்த அபு கட்டால் என்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த அபு கட்டால்? இந்தியா அவனை ஏன் தேடி வந்தது? அவன் இந்தியாவில் நடத்திய கொடூர தாக்குதல்கள் என்னென்ன? இப்போது பாகிஸ்தானில் அவனை கொன்றது யார்? என்பதை பார்க்கலாம். நம் நாட்டின் காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் பலவற்றுக்கும் மூளையாக இருப்பது லஷ்கர் பயங்கரவாத அமைப்பு. முழுக்க முழுக்க பாகிஸ்தான் அரசின் ஆதரவில் செயல்படுகிறது. பாகிஸ்தானில் இருந்தபடி காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதும், காஷ்மீரில் புகுந்து தாக்குவதும் இவர்களின் வேலை. இந்த அமைப்புக்கே தலைமை தளபதியாக இருந்தவன் அபு கட்டால். இவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். பாகிஸ்தானின் ஜீலம் என்ற இடத்தில் தனது படை சூழ காரில் சென்று கொண்டிருந்தான். அப்போது மறைந்திருந்த ஆசாமி ஒருத்தன் அபு கட்டால் காரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். 15-20 ரவுண்ட் வரை சுட்டதில் அபு கட்டால் ரத்த வெள்ளத்தில் சரிந்தான். இந்த தாக்குதலில் அபு கட்டாலின் பாதுகாவலன் ஒருத்தனும் இறந்தான். இன்னொருத்தன் கவலைக்கிடமான நிலையில் உள்ளான். இத்தனைக்கும் அபு கட்டாலை சுற்றி எப்போதும் பலத்த பாதுகாப்பு இருக்கும். அவனை பாதுகாக்க சாதாரண உடையில் 2 ராணுவ வீரர்களை பாகிஸ்தான் அரசு நியமித்து இருந்தது. அவர்கள் தவிர லஷ்கர் அமைப்பின் பயங்கரவாதிகளும் அவனுடன் 24 மணி நேரமும் இருப்பர். சம்பவம் நடந்த போது கூட அபு பக்கருடன் நிறைய கார்கள் அணி வகுத்து சென்றன. பலத்த பாதுகாப்பையும் மீறி கச்சிதமாக திட்டமிட்டு அவனை கொலை செய்திருக்கின்றனர். ஆனால் கொலையாளி யார் என்பது உடனடியாக தெரியவரவில்லை. அவனை எதற்காக கொன்றனர் என்பதும் தெரியவில்லை. அதே நேரம் அபு கட்டாலை நம் இந்திய அரசு தீவிரமாக தேடி வந்தது. ஏனென்றால் அவன் அவ்வளவு தாக்குதல்களை காஷ்மீரில் நிகழ்த்தி இருக்கிறான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தான் எப்போதும் இருப்பான். அங்கிருந்தபடி பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதிகளையும் ஒருங்கிணைத்து காஷ்மீரில் அட்டாக் நடத்துவது இவனது பழக்கம். நேர்த்தியாக தாக்குதல் நடத்துவதற்காக ஏற்கனவே இவன் காஷ்மீரில் ரகசியமாக புகுந்து 5 ஆண்டு காலம் தங்கி இருந்தான். இரண்டாயிரமாவது ஆண்டு காஷ்மீருக்குள் வந்தவன் 2005ல் மீண்டும் பாகிஸ்தான் சென்று விட்டான். எல்லாவற்றுக்கும் மேல், உலகை உலுக்கிய மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹபீஸ் சயீத்துக்கு மிகவும் நெருக்கமானவன் அபு கட்டால். அவன் தான் இவனை லஷ்கர் தலைமை தளபதியாக நியமித்தான். கடந்த ஜூன் மாதம் காஷ்மீரின் ரியாசி மாட்டத்தில் ஷிவ் கோரி கோயிலுக்கு சென்று திரும்பி வந்த இந்து பக்தர்கள் பஸ் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்பாவி பக்தர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். 41 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை முன்னின்று நடத்தியது அபு கட்டால் தான். அதே போல் 2023 ஜனவரியில் காஷ்மீர் ரஜோரி மாவட்டம் தங்ரியில் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு வெடித்தது. இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இது பற்றி என்ஐஏ நடத்திய விசாரணையில் தான் அபு கட்டாவின் ஆட்டம் தெரியவந்தது. காஷ்மீரில் இந்துக்களை குறி வைத்தும், ராணுவத்தை குறி வைத்தும் பல தாக்குதல்களை அவன் நடத்தியதை கண்டுபிடித்தனர். அவனை சட்டத்தின் முன் நிறுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் தான் அவன் பாகிஸ்தானில் வைத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறான்.