ஏசியே ஓடாத ஏசி பஸ்: நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு | AC Bus | Consumer Tribune
திருநெல்வேலியை சேர்ந்தவர் ராஜேஷ், வயது 35. கடந்த 2024 ஏப்ரல் 1ம் தேதி மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு போக்குவரத்து கழக ஏசி பஸ்சில் பயணம் செய்தார். டிக்கெட் கட்டணமாக 190 ரூபாய் வசூலிக்கப்பட்டது. சாதாரண பஸ் கட்டணத்தை விட 37 ரூபாய் அதிகம். கூடுதல் கட்டணம் வசூலித்தும் பஸ்சில் ஏசி வேலை செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ராஜேஷ் பஸ் டிப்போ மேனேஜரிடம் புகார் சொன்னார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து திருநெல்வேலி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் கிளடஸ் டோன், உறுப்பினர் கனகசபாபதி முன் விசாரணைக்கு வந்தது. ராஜேஷ் தரப்பில் வக்கீல் பிரம்மா வாதாடினார். பஸ்சில் ஏசி இயங்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்தது குறித்து ஆதாரம் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேஷ் மன உளைச்சல் அடைந்ததுக்கு 25,000, வழக்கு செலவுக்கு 10,000 என மொத்தம் 35,000 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த தொகையை ஒரு மாதத்திற்குள் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளரும், நிர்வாக இயக்குநரும் தங்களது சொந்த பணத்தில் இருந்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அரசு நிதியிலிருந்து இதை வழங்கக்கூடாது.