ஒருவர் மற்றொருவருக்கு கொடுக்க முடிந்த சிறந்த பரிசு கல்வி | Agarwal Educational Trust | Golden Jubile
சென்னை கிண்டியில் அகர்வால் கல்வி அறக்கட்டளையின் பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்வி மட்டுமே ஒருவரால் மற்றொருவருக்கு கொடுக்க முடிந்த செல்வம். என் வாழ்க்கை, கல்வியை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்பதை உணர்த்தியது. நான் வளர்ந்த கிராமத்தில் ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது. அதற்கு மேல் படிப்பை தொடர வேண்டும் என்றால் 6 கிலோ மீட்டர் தூரம் சென்று தான் படிக்க வேண்டும். சுட்டெரிக்கும் வெயிலில் அதனை பொருட்படுத்தாமல் நான் பயணித்து படித்தேன். படிக்கும் காலத்தில் நிறைய சவால்களை நான் எதிர்கொள்ள நேர்ந்தது. இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் நான் கற்ற கல்வி மட்டும் தான். கல்வியின் முக்கியத்துவம் மிகவும் பெரிது. இந்திய மக்கள் தொகையில் இன்று 24 சதவிகிதம் பேர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். 50 சதவிகிதம் பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கையில் தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு இருக்கிறது. மனப்பாடம் செய்வதை தாண்டி, ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்ப வேண்டும். அப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு. கற்பிப்பதில் நவீன கல்வி முறையான டிஜிட்டல் தொழில் முறையை பயன்படுத்தி, மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஒரு அனுபவத்தை, ஆசிரியர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். ஆசிரியர் மட்டுமே மாணவரை நல்ல மனிதராக உருவாக்க முடியும். நல்ல மனிதரால் மட்டுமே நல்ல அப்பா, அம்மா, நண்பர், நல்ல தொழிலதிபர் என பல பரிமாணங்களில் உருவெடுக்க முடியும். எதிர்கால மாணவர்களுக்கு கற்றுத் தரவேண்டியது எதை கற்க வேண்டும், எதை கற்க கூடாது என்பது தான். இப்போது உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு நாடாக இந்தியா இருந்து வருகிறது. மற்ற நாடுகளும் இந்தியாவை எதிர்பார்க்கிறது.