சென்னையில் கடந்த ஆண்டை விட குறைந்த காற்று மாசு | Air pollution | Diwali day | Chennai
தீபாவளி பண்டிகை வியாழனன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே புத்தாடை, ஸ்வீட் வரிசையில் முக்கிய இடம் பிடிப்பது பட்டாசு தான். பட்டாசு வெடிப்பதால் தீபாவளி தினத்தன்று காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. அனுமதித்த நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததற்காக சென்னையில் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் மறுநாள் கலை 6 மணி வரை கண்டறியப்பட்ட காற்று மாசுவின் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கத்தில் 287 என்ற அளவில் காற்றின் தரம் மோசமாக இருந்துள்ளது. குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 என்ற அளவில் காற்று மாசு இருந்துள்ளது. இருந்தாலும் காற்று மாசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல் ஒலி மாசு, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 78.7 டெசிபல் என்ற அளவிலும், குறைந்தபட்சமாக பெசன்ட் நகரில் 59.8 டெசிபல் என்ற அளவிலும் பதிவாகி உள்ளது.