போராடிய பெண்ணிடம் அடிவாங்கிய போலீஸ் அதிகாரி ASHA worker protest Hyderabad slapped police inspector
தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆஷா சுகாதார பணியாளரின் சம்பளத்தை 9500 ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து ஓராண்டை கடந்த நிலையிலும் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ரேவந்த் ரெட்டி நிறைவேற்றவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி ஆஷா ஊழியர்கள் பல கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். எந்த பிரயோஜனமும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாகவே அவர்களது கோரிக்கை இருந்தது. தேர்தல் வாக்குறுதிப்படி, 18 ஆயிரம் சம்பளம் கேட்டு ஐதராபாத்தில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் முன், ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், பெண்கள் வேனில் ஏற மறுத்தனர். இதனால் அவர்களை குண்டுகட்டாக போலீசார் வேனில் ஏற்றினர். அப்போது, கைதான ஒரு பெண் பணியாளர், இன்ஸ்பெக்டர் சீனிவாச சாரி கன்னத்தில் பளார் அறை விட்டார். உடனே மற்ற போலீசார் அதிர்ச்சியடைந்து, அந்த பெண்ணை திட்டினர். பெண் போலீசார் எகிறி குதித்து அடித்தனர். பயப்படாமல் உட்கார்ந்திருந்தார், அந்தப் பெண். டோரை இன்ஸ்பெக்டர் சாத்தும்போது என் கால் மாட்டிக்கொண்டது. அதான் வலி தாங்க முடியாமல் அடித்து விட்டேன் என அந்தப் பெண் கூறினார்.