உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் சென்ற இந்தியர்கள் அவசரமாக தாயகம் திரும்புகின்றனர் | Attari - Wagha gate closed | India

பாகிஸ்தான் சென்ற இந்தியர்கள் அவசரமாக தாயகம் திரும்புகின்றனர் | Attari - Wagha gate closed | India

பஞ்சாப் மாநிலம் அடாரியில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லை உள்ளது. அங்கு கேட் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தொழில்முனைவோர் தினமும் இந்த கேட்டை கடந்து இந்தியா - பாகிஸ்தானுக்கு சென்று வருவது வழக்கம். இரு நாட்டு எல்லையிலுள்ள அடாரி - வாகா பகுதிகளை மையப்படுத்தி, போக்குவரத்து, உணவு, சுற்றுலா என பலதுறை தொழில்கள் அமோகமாக நடந்து வருகின்றன. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய பயங்கர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் முறித்துக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாக அடாரி எல்லையை மூடுவதாக அறிவித்தது. பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் ஒரு வாரத்திற்குள் இங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்களும் தகுந்த ஆவணங்களை காட்டி, உடனே நாடு திரும்பும் படி கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு காரணங்களுக்காக நம் நாட்டின் பல பகுதிகளுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் அவசர அவசரமாக அடாரி எல்லையை கடந்து அந்நாட்டுக்கு செல்கின்றனர். அதே போல், பாகிஸ்தானில் இருந்தும் நம் நாட்டினர் அவசர அவசரமாக தாயகம் திரும்புகின்றனர். அடாரி வழியாக இரு நாட்டு எல்லையை அவசர அவசரமாக கடந்து சென்ற இரு நாட்டு மக்களும், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் பயங்கரவாத தாக்குதலை பகிரங்கமாக கண்டிக்கின்றனர். மேலும் சிலர் அது குறித்து வாய் திறக்க மறுத்தனர். பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இங்கு இல்லையென்றால் எங்கு வேண்டுமானாலும் தொழில் செய்யலாம். உயிர் ஒருமுறைதான் வரும். அது போனால் மீண்டும் வராது. பயங்கரவாதிகளின் செயலை ஒருபோதும் ஏற்க முடியாது என, அடாரி எல்லையில் ஓட்டல் நடத்தும் இந்தியர் ஒருவர் கூறினார். தொழில் ரீதியாக ராஞ்சிக்கு வந்த பாகிஸ்தான் தொழில்முனைவோர் அவசர அவசரமாக பாகிஸ்தான் திரும்பினார். இந்திய அரசின் நடவடிக்கை குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார். நம் நாட்டின் பஞ்சாபில் இருந்து திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் சென்ற ஒருவர் பாதியில் நாடு திரும்பினார். தொழில்விஷயமாக லாகூருக்கு சென்ற இந்திய வியாபாரி, அங்கிருந்து அவசரமாக நாடு திரும்பினார். அவர் கூறுகையில், இபோன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்தால் தான் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முடியும். பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதை ஏற்கவும் முடியாது என்றார். அடாரி - வாகா எல்லையில் இரு நாடுகளை சேர்ந்தோர் அவசர அவசரமாக தங்கள் நாடுகளுக்கு திரும்பிக்கொண்டிருப்பதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !