இன்னொரு ஆப்கானிஸ்தான் உருவாகி விடும் என எச்சரிக்கை Violence against Hindus at Bangladesh|
நமது பக்கத்து நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை துறந்து, உயிர் பிழைக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். கலவரத்தின் போது அங்குள்ள இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடந்தன. அவர்களின் வீடுகள், கடைகளை சூறையாடியதுடன், இந்து பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகினர். இப்போது முகமுது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அங்கு ஆட்சி செய்கிறது. கலவரங்கள் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், அங்கு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாக, அமெரிக்க வாழ் இந்து அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். 1971ல் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக பல வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. அப்போது இந்துக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அப்போது துவங்கி, இந்த ஆண்டு சமீபத்தில் நடந்த கலவரம் வரை இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். லட்சக்காணக்கான இந்து பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் இறந்துள்ளனர். 1971ல் 20 சதவீதமாக இருந்த வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்களின் எண்ணிக்கை இப்போது 8.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வங்கதேசம் இன்னொரு ஆப்கானிஸ்தானாக மாறக்கூடும். அப்படி நடந்தால், அங்குள்ள இந்துக்களுக்கு மட்டுமல்ல அண்டை நாடுகள், அமெரிக்கா உட்பட உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும். அந்நாடு பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கினால் மக்கள் மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே சர்வதேச நாடுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு, வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வங்கதேச இந்துக்களின் பிரதிநிதியான சிதாங்கு குஹா நியூயார்க்கில் கூறினார். அமெரிக்காவில் வசிக்கும் சமூக ஆர்வலர் பங்கஜ் மேத்தாவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.