பெங்காலி சினிமாவிலும் பாலியல் தொல்லை: நடிகைகள் கடிதம் | Bengali actress | Mamatha | sexual harrasmen
கேரளாவில் 2017ம் ஆண்டு பிரபல நடிகை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் மலையாள சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கேரள அரசு குழு அமைத்தது. சினிமாத்துறையில் பணியாற்றும் பெண் கலைஞர்கள், டெக்னீசியன்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். 2019 இறுதியில் ஹேமா கமிட்டி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை கடந்த மாதம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலையாள சினிமாவில் நடிகைகள் முதல் சிறுமிகள் வரை பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைகளை அடுத்தடுத்து கூறினர். புகாருக்கு உள்ளான நடிகர்கள், இயக்குனர்கள் தங்கள் பதவிகளை துறந்தனர். இதனால் கேரளா நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்காலி சினிமா துறையில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, பெங்காலி நடிகைகள் கடிதம் எழுதி உள்ளனர். நடிகைகள் உஷாசி ரே, அனன்யா சென், தனிகா பாசு, சவுரசேனி மைத்ரா, அங்கனா ராய், தாமினி பென்னி பாசு ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல், பெங்காலி திரையுலகில் நிகழும் துன்புறுத்தல் மற்றும் பாலின வன்முறையை விசாரிக்க மேற்கு வங்கத்திலும் சுதந்திரமான விசாரணை கமிட்டியை அமைக்க வேண்டும். கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் பலாக்தாரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். பணியிடத்தில் இதுபோன்ற ஒரு நிலை ஏற்படக்கூடாது.