பீகார் வழக்கில் தேர்தல் கமிஷன் 3வது பிரமாண பத்திரம் | Bihar SIR | Election commission | Voters exclu
பீகாரில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்த நிலையில், ஆகஸ்ட் 1ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. அவர்களில் 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை. 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருந்ததால் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது. தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இந்த வழக்கில், தேர்தல் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை யாரும் கேட்கவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதி சட்டத்தில் இல்லை. அதனால் மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. ஆகஸ்ட் 1ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள். அதற்கு முன்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு, கருத்துகள் கேட்கப்படும். ஆவணங்கள் வழங்க கால அவகாசம் கொடுக்கப்படும். எந்த ஒரு ஆவணமும் வழங்க முடியாமல் இருக்கும் வாக்காளர்களுக்கு உரிய ஆவணங்கள் பெற வழிவகை செய்யப்படும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.