விதிமுறைகளை மீறியதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் பைலட் சஸ்பெண்ட் |British airways flight|Cockpit door open
பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறையை மீறியதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் பைலட் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் இப்போது வெளிவந்துள்ளது. லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று நூற்றுக்கணக்கான பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வழக்கத்துக்கு மாறாக விமானியின் அறையான காக்பிட் கதவு திறந்துள்ளது. மீண்டும் கதவு மூடப்படாமல் குறிப்பிட்ட நேரம் வரை திறந்தே இருந்துள்ளது. 2001 செப்டம்பரில் பயங்கரவாதிகள் அமெரிக்க பயணிகள் விமானங்களை கடத்தி நியூயார்க் நகரில் உள்ள வானுயர கட்டடங்களில் மோதிய சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் விமானிகள் விமானி அறை கதவுகளை பூட்டியே வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பது விதிமுறை. அங்கீகரிக்கப்படாத நபர்கள் காக்பிட் அறைக்குள் நுழைவதை தடுக்க இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாக விமானி அறை கதவு திறந்தே இருந்ததால் பயணிகளும், விமான ஊழியர்களும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவித்தனர். அப்போது தான் பைலட்டின் குடும்பத்தினரும் அதே விமானத்தில் பயணிப்பதும், தான் விமானத்தை இயக்குவதை அவர்கள் பார்ப்பதற்காக, திறந்து காட்டியதும் தெரிந்தது. இந்த சம்பவத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விமானியின் கவன சிதறலால் விபத்து ஏதும் நடந்து விடக்கூடாது என அச்சத்தில் உறைந்தனர். பைலட் செய்த காரியத்தை பற்றி மற்ற பணியாளர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை மற்றும் சிவில் விமான போக்குவரத்து கமிஷன் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்தே விதிமுறைகளை மீறியதற்காக அந்த பைலட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.