தீக்கு இரையான தம்பதி சென்னையில் சோகம்
சென்னை வளசரவாக்கம் அருகே சவுத்ரி நகரை சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீராம். மனைவி, மகளுடன் அவர் வெளியில் சென்று இருந்த நேரத்தில், வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 3 மாடி வீடு முழுவதும் மரவேலைப்பாடுகள் அதிகம் செய்யப்பட்டு இருந்ததால், தீ மளமளவென பரவியது. கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் வீடு முழுவதையும் தீ ஆக்ரமித்தது. ஸ்ரீராமின் 18 வயது மகன் ஸ்ரவன், 80 வயதான பெற்றோர் நடராஜ்-தங்கம் மற்றும் வேலைக்கார பெண் சரஸ்வதி ஆகியோர் தீயில் சிக்கி கொண்டனர். தாத்தா பாட்டியை வெளியேற்ற முடியாத நிலையில், பேரனும், வேலைக்கார பெண்ணும், முதல் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து உயிர்தப்பினர். கீழே விழுந்ததில் வேலைக்கார பெண்ணுக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். தண்ணீர் தீர்ந்ததால் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, தீயில் சிக்கி வயதான தம்பதி இறந்து கிடந்தனர். அவர்களது உடல் மீட்கப்பட்டது. பூஜை அறை விளக்கில் இருந்து தீ பரவியிருக்க கூடும் என்றும், ஏசி மின் கசிவால் ஏற்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான உண்மையான காரணம் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.