நூற்றாண்டு விழா வீட்டில் வாரிசுகள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்| Karaikudi
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் உலகப் புகழ்பெற்ற செட்டிநாடு கட்டிடக் கலையில் கட்டப்பட்ட வீடுகள் நிறைய உள்ளன. அதில் ஒன்று வேலங்குடியில் உள்ள நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு. வேலங்குடியை சேர்ந்த சகோதரர்கள் பெரியணன், சுப்பையா ஆகியோர் வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தில் தந்தை சின்னான் நினைவாக கட்டி வீடு இது. 1 ஏக்கரில், செட்டிநாடு கட்டடக்கலையில் 1922 ஆரம்பித்து 1926ல் கட்டி முடித்தனர். தரை தளம் முதல் தளத்தில், மொத்தம் 30 அறைகள் உள்ளன. வீட்டின் தரைக்கு புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ், வீட்டின் உட்புற சுவருக்கு இத்தாலியன் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. கதவுகளுக்கு பர்மா தேக்கு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த வீடு 100 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பெரியணன், சுப்பையா சகோதரர்களின் 6 தலைமுறை வாரிசுகள் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் வசிக்கின்றனர். 65 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் சேர்ந்து சின்னான் வீட்டின் நூற்றாண்டு விழாவை கேக் வெட்டி கொண்டாடினர். பல ஆண்டுகளாக நேரில் சந்திக்காமல் இருந்த சொந்தங்களை எல்லாம் இந்த வீடு ஒன்று சேர்த்தது. குழந்தைகளுக்கு நடனம், ஓவியம், பட்டிமன்றம் உள்ளிட்டபோட்டிகள் நடத்தி மகிழ்ந்தனர். வாரிசுகள் ஒன்று சேர்ந்து வீட்டுக்கு பர்த் டே கொண்டாடியது காரைக்குடி மக்களை ஆச்சியத்தில் ஆழ்த்தியது.