உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவி மீது பெட்ரோல் ஊற்றி லைட்டரை வீசிய கொடூர காதலன் | college student | chennai | Crime

மாணவி மீது பெட்ரோல் ஊற்றி லைட்டரை வீசிய கொடூர காதலன் | college student | chennai | Crime

காதலிச்சது எல்லாம் பொய்யா? OMR-ல் கல்லூரி மாணவி எரிப்பு சினிமா வில்லனை மிஞ்சிய காதலன் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் காயத்ரி (வயது19). இவர் சத்தியபாமா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி பயோ மெடிக்கல் சயின்ஸ் படித்து வருகிறார். நாவலூரில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். காயத்ரி விருத்தாசலத்தில் பள்ளியில் படித்தபோது தாய்மாமன் ராஜாவின் மகன் ரத்தினகுமாருடன்பழகி வந்தார். இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. ரத்தினகுமார் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். கல்லூரியில் சேர்ந்த பிறகு ரத்தினகுமார் அடிக்கடி நாவலூர் சென்று காயத்ரியை சந்தித்து விட்டு சென்றுள்ளார். நாட்கள் செல்ல செல்ல காயத்ரி படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்த துவங்கினார். ரத்தின குமாருடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். ஆனால், ரத்தினகுமாரோ சதா, காயத்ரியை நினைத்துக் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக காயத்ரிக்கு போன் செய்தார். ரத்தினகுமாரின் ஃபோன் கால்களால் தன்னுடைய படிப்பு பாதிக்கப்படுவதாக நினைத்த காயத்ரி, ஒரு கட்டத்தில் போன் எடுப்பதை தவிர்த்தார். இது, ரத்தினகுமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் மனதில் பலவித காட்சிகள் ஓடின. கல்லூரிக்கு போனதும் புதிய நண்பர்களுடன் சேர்ந்து விட்டாளா? தன்னை விட்டு விட்டு, வேறு யாருடனாவது பழக ஆரம்பித்து விட்டாளா? என நினைத்துள்ளார். அப்படியானால், இத்தனை ஆண்டுகளாய் தன்னை காதலிப்பதாக காயத்ரி சொன்னதெல்லாம் பொய்யா? என மனதுக்குள் குமுற ஆரம்பித்தார். ஏன் போன் எடுக்கவில்லை என ஒருமுறை ரத்தினகுமார் கோபத்துடன் கேட்டபோது, காயத்ரி திரும்ப சத்தம் போட்டுள்ளார். எனக்கு படிக்க நிறைய இருக்கிறது; தயவு செய்து போன் செய்யாதே; என்னிடம் பேசாதே; என்னை பார்க்கவும் வராதே என கோபமாக கூறியுள்ளார். ஊருக்கு வரும்போது பார்க்கிறேன் என கூறி போனை கட் செய்துள்ளார். அதன்பிறகு மறுபடியும் ரத்தின குமார் பலமுறை போன் செய்தும் காயத்ரி போனை எடுக்கவே இல்லை. ஆத்திரமடைந்த ரத்தினகுமார் காயத்ரியை பழிவாங்க திட்டம் போட்டார். கடந்த 30ம் தேதி பஸ்சை பிடித்து சென்னை கோயம்பேடுக்கு வந்தார். மார்க்கெட்டில் வேலையை முடித்ததும் அரை லிட்டர் பெட்ரோல், ஒரு லைட்டர் வாங்கினார். மாலையில் போன் செய்தார். காயத்ரி எடுக்கவில்லை; தொடர்ச்சியாக போன் செய்தும் பலன் இல்லை. இரவு 9 மணிக்கு காயத்ரி போனை எடுத்துள்ளார். உனக்கு என்ன வேணும் என காயத்ரி எறிந்து விழுந்துள்ளார். உன்னை பார்க்க நாவலூர் வந்திருக்கிறேன். ப்ளீஸ் கொஞ்ச நேரம் பேசிட்டு போயிடுறேன் என ரத்தினகுமார் கெஞ்சியுள்ளார். பத்து நிமிஷம்தான் இருப்பேன்; நாளைக்கு காலேஜ்க்கு சீக்கிரம் போகணும் என காயத்ரி கூறியதும் ரத்தினகுமார் ஓகே என்றார். மாமன் மகன் தானே என்று நம்பி விடுதியை விட்டு வெளியே வந்த காயத்ரி ஓ.எம்.ஆர் சாலையில் டீ சாப்பிட்டனர். பிறகு, கடையின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிறு வயதில் இருவரும் நெருக்கமாக பழகியதை நினைவுபடுத்தி பேசியுள்ளார். பழைய பேச்சை எடுக்காதே என காயத்ரி கூறியுள்ளார். உடனே ரத்தினகுமார், உன்னை என்னால் மறக்க முடியாது; என்னை கைவிட்டு விடாதே; நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என கெஞ்சியுள்ளார். அதை காயத்ரி ஏற்கவில்லை. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த ரத்தினகுமார் என்னை காதலிக்க முடியுமா? முடியாதா? என மிரட்டும் தொணியில் கேட்டுள்ளார். காயத்ரி முடியாது என கூறி விட்டு அங்கிருந்து கிளம்ப முயன்றார். அப்போது ரத்தினகுமார் திடீரென பாக்கெட்டில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து பெட்ரோலை காயத்ரி மீது ஊற்றினார். காயத்ரி பயத்தில் ஓட முயற்சிக்க லைட்டரை பற்ற வைத்து அவர் மேலே வீசினார். இதில் தீ மளமளவென பரவியது. அலறித் துடித்த காயத்ரி மீது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை குளோபல் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கு, அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். 40 சதவீத தீ காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர். காயத்ரியை எரித்த ரத்தினகுமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து, தாழம்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாழம்பூர் போலீசார் ரத்தினகுமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி