முதல்வர் தொகுதி போட்டியில் ஹாட்ரிக் அடிக்குமா புதுடில்லி Delhi | New CM | List | Parvesh Varma | N
நாட்டின் முதல் லோக்சபா தேர்தல் 1951--52ல் நடந்தது. அப்போது, டில்லி சட்டசபைக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. காங்கிரஸ் வென்றது. 1956ல் டெல்லி சட்டசபை கலைக்கப்பட்டு யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்ட பின் தேர்தல்கள் நடைபெறவில்லை. 1991ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்தார். 48 ஆக இருந்த தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு 70ஆக அதிகரிக்கப்பட்டன. 1993 தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 5 ஆண்டு ஆட்சியில் மதன்லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். அடுத்து 1998, 2003, 2008 ஆகிய 3 தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது. புதுடெல்லி தொகுதியில் வென்ற ஷீலா தீட்சித் தொடர்ந்து 3 முறை முதல்வராக பதவி வகித்தார். அதன் பின், 2013, 2015, 2020 ஆகிய தேர்தல்களில் புதுடெல்லி தொகுதியில் வென்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் வென்று தொடர்ந்து முதல்வராக இருந்தார். புதுடில்லி தொகுதியில் வென்ற ஷீலா தீக் ஷித், கெஜ்ரிவால் ஆகியோரே 1998 முதல் 2024 வரை 26 ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்தனர். இந்தாண்டு நடந்த தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் நின்ற கெஜ்ரிவாலை, பாஜ வேட்பாளர் பர்வேஷ் சர்மா தோற்கடித்தார். பாஜ ஆட்சியில் யார் முதல்வர் என்ற ரேஸில் பர்வேஷும் இருக்கிறார். இவர் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகன். இவரை தவிர, விஜேந்தர் குப்தா, முன்னாள் முதல்வர் மதன்லால் குரானா மகன் ஹரிஷ் குரானா, டில்லி பாஜ முன்னாள் தலைவர் சதீஷ் உபாத்யாய் ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒருவேளை பர்வேஷ் வர்மா டில்லி முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தால், தொடர்ந்து 3 முதல்வர்களை தந்த சட்டசபை தொகுதி என்ற பெருமை புதுடில்லி தொகுதிக்கு கிடைக்கும்.