2 டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது! | Delhi Blast | Turkey | NIA | Investigation | kashmir
பயங்கரவாதி உமர் நபி வீடு இடித்து தரைமட்டம் டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காஷ்மீர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மிலை போலீசார் கைது செய்தனர். குண்டுவெடிப்பில் பெண் டாக்டரான ஷாயின் சையத்துக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைதானார். தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி இறந்த மற்றொரு டாக்டரான உமரும் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளான். 4 பேரும், டில்லி அருகே பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது தெரியவந்தது. அந்த பல்கலை புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழலில் இதில் தொடர்புள்ள காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உட்பட மேலும் 5 பேர் போலீசார் பிடியில் சிக்கி உள்ளனர். உ.பி., கான்பூரைச் சேர்ந்த டாக்டர் முகமது ஆரிப் மிர்,32, ஹபூரில் உள்ள ஜிஎஸ் மருத்துவக் கல்லூரி டாக்டர் பரூக் ஆகியோர் கைதாகி உள்ளனர். இவர்கள் இருவரும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் ஜமீல் என்பவர் அல் பலாஹ் பல்கலையில் ஊழியராக இருந்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீரில் இருந்து டாக்டர்களை இந்தப் பல்கலையில் வேலைக்கு சேர்த்து விடும் பணியை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார். 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக டில்லி அழைத்துச் சென்றுள்ளனர். அனந்த்நாக்கைச் சேர்ந்த ஆரிப் மிர், கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் நபியுடன் தொடர்பில் இருந்தவர். இவரின் வீடுகளில் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கார் குண்டு வெடிப்பை நடத்திய உமர் நபிக்கு சொந்தமாக காஷ்மீரில் இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.