டிஜிட்டல் அரெஸ்ட்: 17000 வாட்ஸ் ஆப் கணக்கு முடக்கம் Digital Arrest| Cyber Crime | Home ministry |
சைபர் குற்றங்களால் நடக்கும் பண மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைது குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகளுக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் நாட்டின் அனைத்து மாநில போலீஸ் துறைகளுடன் இணைந்து செயல்பட்டது. இந்த ஆண்டு மட்டும் 6 ஆயிரம் டிஜிட்டல் அரெஸ்ட் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது பற்றி விசாரணை நடக்கிறது. டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் சைபர் மோசடிகளில் ஈடுபட்ட 6 லட்சம் போன் இணைப்புகள் முடக்கப்பட்டு உள்ளன. சைபர் மோசடிகளில் ஈடுபட்ட 17 ஆயிரம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான கணக்குகள் கம்போடியா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து நாடுகளை சேர்ந்தவை. அங்கிருந்து இந்தியாவில் இணைய மோசடிகள் செய்துவந்துள்ளனர். வெளிநாட்டு வேலை விரும்பும், தொழில் நுட்பம் படித்த இந்திய இளைஞர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மோசடியாக பயன்படுத்தி சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் மூலம் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் ரூ.6 கோடி ரூபாய் மோசடி நடைபெறுகிறது. இந்த ஆண்டில் முதல் 10 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 140 கோடியை மோசடியாளர்கள் பறித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் வரை டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக 92 ஆயிரத்து 334 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.