திமுக கூட்டத்தில் பீர் சப்ளை: மது ஒழிப்பு கொள்கை இதுதானா? dmk booth meeting beer bottles for dmk m
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமையில் துவங்கி, மாஜி மந்திரி பொன்முடி இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசியது வரை நெகடிவ் செய்திகளில் அதிகமாக அடிபடுவது திமுகதான் என்பது தமிழகம் நன்கறிந்த உண்மை. இப்போது, திமுகவைப் பற்றி அதேமாதிரி இன்னொரு பரபரப்பு செய்தி வெளிவந்திருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி ஆகியோர் வாக்குச்சாவடியில் இளைஞரணி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி பேசினர். கூட்டம் முடிந்ததும் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனும் பொறுப்பாளர் பெறுநர்கிள்ளியும் கிளம்பியதும் அந்த சம்பவம் அரங்கேறியது. கூட்டத்துக்கு வந்திருந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. கூடவே மதுவும். சாப்பாட்டு மேஜையில் இலைக்கு பக்கத்தில் தண்ணீர் பாட்டில் மட்டுமல்ல; ஆளுக்கொரு பீர் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி திமுக தலைமைக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய செயலாளர்கள்தான் மதுவுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. 66 உயிர்களை பலிவாங்கிய அதே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுகவினர் நடத்திய இந்த கூத்து திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டுகிறது. மது ஒழிப்பு பற்றி திமுக தலைமை பேசுவதெல்லாம் ஏமாற்று வேலைதான் என கள்ளச்சாராயத்துக்கு சொந்தங்களை பலிகொடுத்த கள்ளக்குறிச்சி மக்கள் விளாசி தள்ளுகின்றனர். தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக காட்டிக் கொள்கிறார்கள்; இன்னொருபக்கம் இளைஞர்களுக்கு ஆளுங்கட்சியே ஊற்றிக் கொடுத்து போதை அடிமைகளாக்குகின்றனர் எனவும் கள்ளக்குறிச்சி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதுதான் மது விருந்துக்கு காரணம் என பேசப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தை பிரித்துதான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஒரே மாவட்டமாக இருந்தபோதிலிருந்தே பொன்முடிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயனுக்கும் முட்டல் மோதல்கள் இருந்தன. பொன்முடி பதவி போனதும் அந்த சந்தோஷத்தில்தான் வசந்தம் அணியினர் மதுவிருந்து நடத்தியிருக்கலாம் எனவும் கள்ளக்குறிச்சி கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.