தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிக்கும் நாடுகள்! Indian Households | Gold Investment | HSBC Global
இந்தியாவுக்கும் தங்கத்துக்கும் இடையேயான உறவு, புதுப்புது உயரங்களை எட்டி வருகிறது. உலகிலேயே அதிக தங்க இருப்புகளை கொண்ட டாப் 10 மத்திய வங்கிகளை காட்டிலும், இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்க இருப்பு அதிகம் என, எச்.எஸ்.பி.சி. நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய குடும்பங்களின் தங்க இருப்பு 25,000 டன். இது அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, இந்தியா, ஜப்பான், துருக்கி ஆகிய 10 நாடுகளுடைய மத்திய வங்கிகளின் இருப்பை காட்டிலும் அதிகமாகும். இவற்றில் அதிகபட்சமாக அமெரிக்க மத்திய வங்கியிடம் 8,133 டன் தங்க இருப்பு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனி மத்திய வங்கியிடம் 3,300 டன் இருப்பு உள்ளது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 876.18 டன்னாக உள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. கடந்த 2022 முதல், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் இருப்பு 1,000 டன்னுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. நிச்சயமற்ற சூழலில் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுவதால், தங்கத்தின் மீதான வங்கிகளின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.