தீ விபத்தால் ஐகோர்ட் நீதிபதி சிக்கியது எப்படி? | High court | Justice Yashwant Varma
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் வர்மா. இவர் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். டெல்லியில் உள்ள பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த வாரம் ஹோலி பண்டிகையின் போது யஷ்வந்த் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் வெளியூர் சென்ற நிலையில் அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புப்படையினர் அடித்தளம், மாடியில் பரவிய தீயை அணைந்தனர். பிறகு தீயணைப்பு வீரர்கள் நீதிபதி வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று முழுமையாக தீ அணைக்கப்பட்டு விட்டதா? என ஆய்வு செய்தனர். அப்போது பல அறைகளில் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதை கண்டதும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இதுபற்றி விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை செய்தார். அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் யஸ்வந்த் வர்மாமை இடமாற்றம் செய்வது மட்டும் போதாது ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கொலிஜீயம் உறுப்பினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்தால், ஒரு உள்விசாரணை குழுவினை அமைக்கவேண்டும் என தெரிவித்தனர். நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கையாள்வதற்கான நடைமுறைகளின் படி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, புகார் பெறப்பட்ட நீதிபதியிடமிருந்து விளக்கம் கேட்பார். அவரால் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தலைமை நீதிபதிக்கு உடன்பாடு இல்லாத போது, ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் இரண்டு ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய உள்விசாரணைக் குழுவினை அமைக்கலாம். விசாரணைக் குழு என்பது நீதிபதி ஒருவரை நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய வைக்க எடுக்கப்படும் முதல் படியாகும்.