பாகிஸ்தானை அலறவிடும் மக்கள் கிளர்ச்சி-பதற்றம் | pok protest | india vs pakistan | pakistan protest
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது உட்பட 38 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகர் முசாபராபாதில், அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில் இந்த போராட்டம் துவங்கியது. முசாபராபாத், தத்யா, ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளுக்கும் பரவியது. ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஊர்வலம் மற்றும் போராட்டத்தை தடுக்க போலீசார் ஏற்படுத்திய தடைகளைத் தாண்டி மக்கள் போராட்டம் செய்தனர். அவர்களை கலைக்க பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 போலீசாரும் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தாண்டி பாகிஸ்தான் முழுதும் போராட்டம் பரவ ஆரம்பித்தது. இதனால் பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம் தொற்றி உள்ளது. குறிப்பாக, சொந்த நாட்டு மக்களையே பாகிஸ்தான் வேட்டையாடுவதாகக் கூறி, கராச்சியில் நுாற்றுக் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமாபாதில் வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அமைதி போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். பத்திரிகையாளர்கள் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். தொடர்ந்து போராட்டம் பல நகரங்களுக்கும் பரவி வருவதால் பாகிஸ்தான் அரசாங்கம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தான் ஆக்கி ரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. அதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதுடன், அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை பாகிஸ்தான் அரசு செய்து கொடுக்காமல் புறக்கணித்து வந்துள்ளது. இதற்கு அந்த நாட்டை பொறுப்பாக்க வேண்டும். இப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல இடங்களில் நடக்கும் போராட்டம், அங்குள்ள மக்கள் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் காட்டும் கொடூர செயல்கள் குறித்தும் எங்களுக்கு தகவல் வருகின்றன. சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து வளங்களை கொள்ளையடிப்பதும், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறையுமே போராட்டத்துக்கு காரணம். அங்கு நடக்கும் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இந்தியா சாடியது.