உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அயன்டோம் தாண்டி ஈரான் ஏவுகணை போனது எப்படி? | Israel | Iron Dome | Fattah-2

அயன்டோம் தாண்டி ஈரான் ஏவுகணை போனது எப்படி? | Israel | Iron Dome | Fattah-2

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகள் முதல் தலைவர் ஹசன் நசரல்லா வரை ராக்கெட் ஏவி போட்டு தள்ளியது இஸ்ரேல். ஹிஸ்புல்லா அமைப்புக்கு நெருக்கமாக உள்ளவர்களையும் இலக்கு வைத்து தாக்கி வருகிறது. குறிப்பாக லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்குகள் குண்டு வீசி தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது ஈரான். ஏவுகணை கட்டமைப்பில் சற்று முன்னேறிய நாடு ஈரான். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 90 சதவிகிதம் ஏவுகணைகள் இலக்கை சரியாக குறிவைத்து அழித்தது என ஈரான் சொல்கிறது. நாங்கள் மூன்று இலக்குகளை குறிவைத்தோம். ஒன்று இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் தலைமை அலுவலகம். இரண்டாவது அமெரிக்காவின் F35 மற்றும் F15 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள நெவடிம் விமான தளம். மூன்றாவது ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஹெட்செரிம் விமான தளம். இந்த இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டிருக்கின்றன என ஈரான் ராணுவம் கூறியது. ஈரான் தாக்குதலில் 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நெவடிம் விமான தளம் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மொசாட் தலைமையகம் அருகே ஏவுகணைகள் தாக்கியதில் பெரிய பள்ளம் உண்டானது என ஈரான் அறிவித்துள்ளது. முதல் முறையாக தாக்குதலுக்கு பத்தா-2 (Fattah) என்கிற ஏவுகணையை ஈரான் பயன்படுத்தி உள்ளது. இது தரையில் இருந்து கிளம்பி மீண்டும் தரை இலக்கை தாக்கும் பாலஸ்டிக் வகை ஏவுகணை ஆகும். 450 கிலோ வரை எடை கொண்டது. 1400 கிலோ மீட்டர் வரை பறந்து சென்று தாக்கும் திறன் உடையது. கடந்த 2023ல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சமீபத்தில் தான் ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒலியை விட 13 மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணை இது. இதனால் தான் இஸ்ரேலின் அயர்டோம்(Iron Dome) எங்கிற வான்பாதுகாப்பு அம்சத்தை தாண்டி சென்று தாக்கியுள்ளது. அதாவது இஸ்ரேலை தாக்க எங்கிருந்து ஏவுகணை பறந்தாலும் குறிப்பட்ட எல்லைக்கு முன்னால் அயர்டோம் கண்டுபிடித்து விடும். எதிரி நாட்டு ஏவுகணை எங்கிருந்து வருகிறது, என்ன வேகத்தில் வருகிறது என்பதை கணினி மூலம் கணித்து அதனை வானில் தாக்கி அழிக்கும். இஸ்ரேலை பொறுத்தவரையில் இது தான் மிகப்பெரிய அரணாக உள்ளது. கடந்த ஆண்டு காசாவில் இருந்து ஹாமாஸ் அமைப்பு ஏவுகணை வீசி தாக்கியபோது கூட அயர்டோம் தான் இஸ்ரேலை காத்தது. இப்போது அதனை மீறி ஈரான் ஏவுகணை இஸ்ரேலுக்கு பறந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னால் ஒரு சில தொழில்நுட்ப காரணங்கள் உள்ளது. எதிரி நாட்டு ஏவுகணையின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்தால் அயர்டோம் எளிதாக கண்டுபிடித்து அழிக்கும். ஆனால் ஈரான் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அனுப்பியதால் ஒரு சில ஏவுகணைகளை ரேடார் ஸ்கேன் செய்ய தவறியது. அடுத்து ஈரான் ஏவுகணை ஹைப்பர் சோனிக் வேகத்தில் வந்த காரணத்தால் அயர்டோம் அமைப்பு பதில் தாக்குதல் நடத்துவது சவாலானது. ஹைப்பர் சோனிக் வேகம் என்றால் கை சொடுக்கும் நேரத்தில் ஏவுகணை 8 கிலோ மீட்டர் தாண்டி சென்றுவிடும்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை