இஸ்ரேல் இழுத்த புது பஞ்சாயத்து... உலக நாடுகள் அதிர்ச்சி | Israel vs Hezbollah | UNIFIL | Lebanon
லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்பை எதிர்த்து இஸ்ரேல் தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஹெஸ்புலாவும், லெபனானில் உள்ள ஹெஸ்புலா முகாம்களை குறி வைத்து இஸ்ரேலும் மாறி மாறி ஏவுகணை, ராக்கெட் குண்டுகளை வீசி வருகின்றன. ஹெஸ்புலா தாக்குதலில் இஸ்ரேலுக்கு பெரிய இழப்பு இல்லை. ஆனால் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2200க்கும் மேற்பட்டவர்கள் லெபனானில் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் பலர் அப்பாவி மக்கள் என்று ஐநா சபை கவலை தெரிவித்து வந்த நிலையில், இப்போது புதிய சிக்கல் ஒன்றில் இஸ்ரேல் சிக்கி இருக்கிறது. லெபனானில் இஸ்ரேல் செய்த காரியம் இந்தியாவுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். இஸ்ரேல், லெபனான் இடையே பல ஆண்டுகளாக வெவ்வேறு வடிவில் சண்டை நீடிக்கிறது. இங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக 2006ம் ஆண்டில் ஐநா பாதுகாப்பு சபை முக்கிய முடிவு ஒன்றை எடுத்தது. அதன்படி அதே ஆண்டில் இஸ்ரேல், லெபனான் இடையேயான 120 கிலோ மீட்டர் தூர நீலக்கோடு என்று அழைக்கப்படும் எல்லை கோட்டில் இடைக்கால நடவடிக்கையாக அமைதிப்படையை நிலை நிறுத்தியது ஐநா பாதுகாப்பு சபை. இந்த அமைதிப்படைக்கு United Nations Interim Force in Lebanon என்று பெயர். சுருக்கமாக யுனிஃபில் UNIFIL என்பார்கள். அமைதிப்படையில் உலகின் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 600 வீரர்களும் அதில் அடக்கம். அமைதிப்படை நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் நீலக்கோடு தெற்கு லெபனான் எல்லையில் உள்ளது. அமைதிப்படையின் தலைமை அலுவலகம் Naqoura என்ற தெற்கு லெபனான் சிட்டியில் அமைந்துள்ளது. இதே தெற்கு லெபனானில் தான் இப்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமைதிப்படை தொடர்புடைய இடங்களும் இலக்காகி வருவது தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வியாழக்கிழமை ஹெஸ்புலாவை குறி வைத்து இஸ்ரேல் வீசிய பீரங்கி குண்டு Naqoura நகரில் உள்ள அமைதிப்படையின் தலைமை அலுவலகத்தை பதம் பார்த்தது.