பாலமேடு ஜல்லிகட்டு போட்டி உற்சாக துவக்கம்! Jallikattu | Palamedu | Madurai
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள், காளைகள் அவிழ்த்து விடும் இடம், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள், காளைகள் சேகரிப்பு இடங்கள், பாதுகாப்பு வேலி என முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 2,400 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள், அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 4,820 காளைகளும், 1,914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். சிறந்த காளைக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரர்க்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. இது தவிர நாட்டின கன்றுடன் பசு மாடு, பைக், தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஜல்லிகட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.