கர்நாடகாவில் தக் லைப்க்கு தடை விதிக்க முடியாது | Kamal | supreme court | thug life
மன்னிப்பு கேட்க சொல்வது ஐகோர்ட்டின் வேலையில்லை கமல் பட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் காட்டம் கர்நாடகாவில் தக் லைப்க்கு தடை விதிக்க முடியாது கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் கடந்த 5ம் தேதி ரிலீஸ் ஆனது. அதற்கு முன்பு சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய கமல், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக கருத்து தெரிவித்தார். இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது படத்தை திரையிட போவதில்லை என கர்நாடக பிலிம் சேம்பர் அறிவித்தது. இதை எதிர்த்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பட தயாரிப்பு நிறுவனம் கர்நாடக ஐகோர்ட்டில் முறையிட்டது. மொழி குறித்த கமலின் கருத்தை ஐகோர்ட் கண்டித்தது. கமல் மன்னிப்பு கேட்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார். தவறே செய்யவில்லை எனக்கூறி மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், தக் லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க கோரி மகேஷ் ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் கூறும்போது, உரிய தணிக்கை சான்று பெற்ற தக் லைப் படத்தை, மொழி விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது. படத்தை பார்ப்பதும் பார்க்காததும் மக்களின் விருப்பம். திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை மாநிலஅரசு உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.