இந்தியாவை உலுக்கும் டெரர் அட்டாக்-பகீர் காட்சி | kapil sharma cafe | khalistani | Harjit Singh Laddi
இந்தியாவை சேர்ந்த ஸ்டான்ட் அப் காமெடியன் கபில் சர்மா, கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரேயில் புதிதாக கஃபே ஒன்றை துவங்கினார். சில நாட்களுக்கு முன்பு தான் இதன் துவக்க விழா நடந்தது. இன்று கஃபேக்கு வெளியே திடீரென வந்து நின்ற காரில் இருந்து ஆசாமி ஒருத்தன் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினான். கஃபேயை நோக்கி மொத்தம் 9 ரவுண்ட் சுட்டான். உள்ளே இருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறினர். நல்ல வேளையாக இதில் யாருக்கும் பாதிப்பில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த கனடா போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரணையை துவங்கினர். இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், இதற்கு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றான். கபில் சர்மா இதற்கு முன்பு தங்கள் கோட்பாடுக்கு எதிராக பேசியதால் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக அவன் சொன்னான். ஹர்ஜித் சிங் லட்டி சாதாரண ஆள் இல்லை. இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதி. இவன் இந்தியாவில் ஏராளமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு இருக்கிறான். குறிப்பாக 2024 ஏப்ரலில் நடந்த விஷ்வ இந்து பரிஷத் லீடர் விகாஸ் பிரபாகர் கொலையில் தொடர்புடையவன். பஞ்சாபின் ரூப்நகரில் தனக்கு சொந்தமான கடையில் விகாஸ் பிரபாகர் இருந்த போது சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஹர்ஜித் சிங் லட்டி. அவனை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. கனடாவில் இருந்து இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் எதிராக காலிஸ்தானி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறை அல்ல. கனடாவில் நிறைய காலிஸ்தானி பயங்கரவாதிகளும், ஆதரவாளர்களும் இருக்கின்றனர். இவர்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலி. இந்தியா எவ்வளவோ சொல்லியும், உள்ளூர் அரசியல் காரணங்களுக்காக கனடா அரசு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்த போது, இந்த விவகாரத்தில் இந்தியா, கனடா இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டான். அந்த கொலையில் நேரடியாக இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டினார். இது தான் இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு துவக்கத்தில் மார்க் கார்னி கனடா பிரதமராக தேர்வானார். அதன் பிறகு கனடா, இந்தியா உறவினர் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது. இந்த நிலையில் தான் கபில் சர்மா கஃபே மீது தாக்குதல் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.