பாக்மதி ரயில் விபத்து பற்றி அதிகாரிகள் சொல்வது என்ன?| kavaraipettai train accident|bagmati express
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11ம் தேதி, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. 13 பெட்டிகள் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை. மெயின் லைனில் செல்ல சிக்னல் கொடுக்கப்பட்டு இருந்தும், எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் நுழைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஸ்விச் பாய்ன்ட் போல்ட்கள் கழற்றப்பட்டு இருந்தன. இது வழக்கத்துக்கு மாறாக இருந்ததை கண்டுபிடித்தனர். தடயவியல் நிபுணர்கள் அந்த மாதிரிகளை சேகரித்தனர். ரயில்வே போலீசாரும் விசாரித்து வரும் நிலையில், விபத்து தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் குழு 16 பக்க அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சதித்திட்டம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, கவரைப்பேட்டை ரயில் விபத்து பற்றி, 13 பிரிவு அதிகாரிகளிடம், தென்மண்டல பாதுகாப்பு ஆணையர், விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிந்த பின்புதான் எதுவும் சொல்ல முடியும் என்றனர்.