அமெரிக்கா குற்றச்சாட்டால் கை நழுவிய பல கோடி ஒப்பந்தம் adhani| SECI| kenya contract cancel
சோலார் மின்சாரம் விநியோகம் செய்ய மத்திய அரசின் SECI எனப்படும் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த நிறுவனத்துடன், தமிழகம், ஆந்திரா, ஓடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களின் மின்வாரியங்கள் ஒப்பந்தம் செய்வதற்காக 2100 கோடி ரூபாய் அதானி குழுமம் லஞ்சம் கொடுத்தது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களை பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வைத்து அதானி குழுமம் ஏமாற்றி உள்ளதாக கூறியுள்ளது. இது இந்திய அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்களை கென்யா அரசு ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. கென்யா எரிசக்தி துறையை 30 ஆண்டுகளுக்கு நிர்வாகிக்க அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இந்த ஒப்பந்தம் 736 மில்லியன் டாலர் மதிப்புடையது. கடந்த மாதம் தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து இருந்தது. இந்நிலையில், கென்யா அரசே அதானி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதேபோல் கென்யாவின் முதன்மை ஏர்போர்ட்டை பராமரிக்க அதானி குழுமம் குத்தகைக்கு எடுத்து இருந்தது. இதன் மதிப்பு 1.85 மில்லியன் டாலர். இந்த ஒப்பந்தத்தையும் கென்யா ரத்து செய்து இருக்கிறது. அமெரிக்காவின் குற்றச்சாட்டு காரணமாக, அதானி குழும நிறுவனங்கள் பங்குகள் 23 சதவீதம் வரை சரிந்தன. இதன் மூலம் 2.25 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தன.