உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மைப்பணியாளர் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு | high court

தூய்மைப்பணியாளர் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு | high court

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மை பணிகளை ராம்கி எனும் தனியார் நிறுவனத்துக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. தனியாருக்கு விடுவதை எதிர்த்தும் பணிநிரந்தரம் கோரியும் தூய்மைப்பணியாளர்கள் 13 நாளாக ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 13ம்தேதி நள்ளிரவு அவர்களை குண்டுகட்டாக கைது செய்து, போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது, போலீசார் தூய்மைப்பணியாளர்களை நடத்திய விதம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில், சென்னையில் தனியாருக்கு தூய்மைப்பணிகளை வழங்கும் மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சுரேந்தர் விசாரித்தார். தனியார் கைக்கு போனால் 2 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். பணி நிரந்தரம் வழங்கக் கோரிய வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது; இப்படிப்பட்ட தருணத்தில் தனியாரிடம் ஒப்படைப்பது ஏற்புடையது அல்ல; தடை விதிக்க வேண்டும். 15 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கக் கூடாது எனவும் மனுதாரர் தரப்பு வாதங்களை முன்வைத்தது. அந்த வாதத்தை மாநகராட்சி மறுத்தது. யாரும் வேலையை இழக்க மாட்டார்கள். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் ஏற்கனவே 11 ம ண்டலங்களில் தூய்மைப்பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது 2 மண்டலங்களில் பணியாற்றும் 2ஆயிரம் ஊழியர்களுக்கு அதிக சம்பளம், இன்சூரன்ஸ், வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க ஒப்பந்த நிறுவனம் முன்வந்துள்ளது. வேலை பறிபோகும் என்ற அச்சம் தேவையில்லாதது என மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இந்த முடிவில் விதிமீறல் இருந்தால் மட்டுமே கோர்ட் தலையிட முடியும்; இல்லாவிட்டால் தலையிட முடியாது என ஒப்பந்த நிறுவனம் தரப்பு வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுரேந்தர் இன்று தீர்ப்பளித்தார். பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை வரவில்லை. சென்னை மாநகராட்சியும், அரசும் கலந்து பேசி பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, 2 மண்டலங்களில் தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க தடை இல்லை. தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என நீதிபதி சுரேந்தர் உத்தரவிட்டார்.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி