மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் காரசாரம்! | Maharashtra Local Body Election
இட ஒதுக்கீடு பெற்றவர்கள் இடம் தர மறுப்பது ஏன்? சுப்ரீம் கோர்ட் நீதிபதி வேதனை! மகாராஷ்டிராவில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் கடைசியாக 2016ல் நடந்தது. அதன் பிறகு தேர்தல் நடக்கவில்லை. ஓ.பி.சி. பிரிவு வேட்பாளர்களுக்குரிய இடஒதுக்கீடு பிரச்னையில் ஏற்பட்ட சட்ட மோதல்கள் காரணமாக தேர்தல் தள்ளிப் போனது. இந்த பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்து வருகிறது. நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் அடங்கிய அமர்வு நீதிமன்றம் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சங்கர நாராயணன், உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட மகராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது: இடஒதுக்கீடு விவகாரம் என்பது ரயில் பெட்டிகளைப் போல மாறிவிட்டது. பெட்டிக்கு வெளியே இருந்தவர்கள் பெட்டிக்குள் செல்ல போராடினார்கள். உள்ளே நுழைந்த பிறகு மற்றவர்கள் அந்தப் பெட்டிக்குள் வருவதை விரும்பவில்லை. அவர்கள் உள்ளே வருவதை தடுக்க அத்தனை முயற்சிகளையும் செய்கிறார்கள். மகாராஷ்டிராவில் நீண்ட காலமாக உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கவில்லை. ஓபிசி இடஒதுக்கீடு காரணமாக உள்ளாட்சி தேர்தல்களை மேலும் தாமதப்படுத்த முடியாது. இது குறித்து மகாராஷ்டிரா அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.