மம்தாவின் ராஜினாமா முடிவுக்கு காரணமே இதுதான் | kolkata woman doctor case | CM Mamata ready to resign
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முதலில் பெண் டாக்டர் வழக்கை விசாரித்தது கொல்கத்தா போலீஸ் தான். அப்போது உண்மையை மறைக்க போலீசும், மேற்கு வங்க அரசும் முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண் டாக்டருடன் பணிபுரிந்த சக பயிற்சி டாக்டர்கள், ஜூனியர் டாக்டர்கள், பெண் டாக்டரின் பெற்றோர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தனர். போலீஸ், மருத்துவமனை நிர்வாகம், மேற்கு வங்க அரசு செய்த சில காரியங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசுக்கு எதிராக நடந்த பல போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. ஆனால் ஜூனியர் டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் எச்சரித்தும் அவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதற்கிடையே அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முதல்வர் மம்தா முடிவு செய்தார். இது தொடர்பாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் 2 அழைப்பையும் நிராகரித்த பெண் டாக்டர்கள், பேச்சு வார்த்தையில் முதல்வர் இருக்க வேண்டும்; 30 பேரை அனுமதிக்க வேண்டும்; பேச்சு வார்த்தையை லைவ் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இவற்றில் சில கோரிக்கைகளை நிராகரித்த மேற்கு வங்க அரசு, டாக்டர்கள் பேச்சு வார்த்தையின் போது முதல்வர் வருவார் என்ற உத்தரவாதத்தை தந்தது. 3வது முறையாக பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து ஜூனியர் டாக்டர்களுக்கு மேற்கு வங்க அரசு கடிதம் எழுதியது. அதன்படி, வியாழன் மாலை 5 மணிக்கு முதல்வர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மம்தா பங்கேற்பார். டாக்டர்கள் 15 பேர் பங்கேற்க அனுமதி உண்டு. நேரடி ஒளிபரப்பு செய்வதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் பேச்சு வார்த்தை முழுதும் வீடியோ ரெக்கார்ட் செய்யப்படும் என்று மேற்கு வங்க அரசு கூறியது. மாலை 5 மணி ஆனதும் முதல்வர் அலுவலகம் பரபரப்பானது. பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்த அரங்கத்துக்கு முதல்வர் வந்தார். அவருக்கு ஒதுக்கிய இருக்கையில் அமர்ந்தார். உயர் அதிகாரிகளும் வந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் டாக்டர்கள் ஒருத்தரும் வரவில்லை. மம்தா அதே அரங்கத்தில் 2 மணி நேரம் காத்திருந்தார். அப்போதும் யாரும் வரவில்லை. மேற்கு வங்க அரசின் அழைப்பை ஜூனியர் டாக்டர்கள் நிராகரித்தனர். 30 பேரை அனுமதிக்க வேண்டும்; லைவ் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததால் பேச்சு வார்த்தையை அவர்கள் நிராகரித்தனர். இது பற்றி மம்தா வேதனை தெரிவித்தார். ஜூனியர் டாக்டர்கள் வருவார்கள் என்று 2 மணி நேரம் பேச்சு வார்த்தை அரங்கில் காத்திருந்தேன். ஆனால் யாரும் வரவில்லை. பேச்சு வார்த்தையின் அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே பதிவு செய்ய எல்லா வசதியும் செய்து வைத்திருந்தோம். நேரடி ஒளிபரப்பு கூடாது என்பதல்ல எங்கள் ஆசை. ஆனால் இந்த விஷயத்தில் நிறைய சட்ட சிக்கல் இருப்பதை கவனிக்க வேண்டும் என்று மம்தா கூறினார். பின்னர் பரபரப்பான வீடியோவையும் மம்தா வெளியிட்டார். கையெடுத்து கும்பிட்டபடி பேசிய மம்தா, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தார். எனக்கு முதல்வர் பதவியை பற்றி எல்லாம் கவலை இல்லை. அதை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். எனக்கு தேவை நீதி தான். நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் என் கவனம் உள்ளது. ஜூனியர் டாக்டரிடம் பேச எவ்வளவோ முயற்சிகளை எடுத்தேன். இதற்காக 3 நாட்கள் காத்திருந்தேன். அவர்கள் சுப்ரீம் கோர்ட் சொன்னதை கூட கேட்கவில்லை. ஆனாலும் அவர்களுக்காக உயர் அதிகாரிகளுடன் 3 நாட்கள் காத்திருந்தேன். போராடும் டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும். எங்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை. சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு மருத்துவம் கிடைக்க வேண்டும். உடனே டாக்டர்கள் வேலையில் சேர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் டூட்டிக்கு வரவில்லை. இருப்பினும் டாக்டர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை பொறுத்துக்கொள்ள வேண்டியது எங்கள் கடமை என்று நினைக்கிறேன் என மம்தா தெரிவித்தார்.