3 முக்கிய வழக்குகள் என்ஐஏவுக்கு மாற்றம்! | Manipur Issue | NIA takes over Manipur violence cases
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே வெடித்த மோதல் மீண்டும் வன்முறையாக மாறி உள்ளது. இரு பிரிவினருக்கும் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் அவ்வப்போது மீண்டும் தொடர்ந்து வந்தது. இம்மாதம் தொடக்கத்தில் குக்கி சமூகத்தினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர். குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய சில கலவரக்காரர்கள் மெய்தி சமூக மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். பெண் ஒருவர் கடத்தி கொல்லப்பட்டார். விவசாயிகள் மீதும் தாக்குதல் நடத்தினர். கடந்த வாரம் சிஆர்பிஎப் முகாம் மீதும் இந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. சிஆர்பிஎப் வீரர்கள் கொடுத்த பதிலடியில் கலவரம் செய்த 10 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். கலவரத்தின் நடுவே மெய்தி சமூகத்தை சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 6 பேரை கடத்தி சென்றனர். தொடர் தேடுதல் வேட்டையில் கடந்த வெள்ளியன்று 6 பேரும் அங்குள்ள ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மெய்தி சமூக மக்கள் கொதித்தெழுந்து மணிப்பூர் மீண்டும் வன்முறை காடானது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பைரேன் சிங் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த சூழலில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விசாரிக்க என்ஐஏவும் களமிறங்கி உள்ளது. நவம்பர் 8ல் ஜிரிபாம் பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவினரால் பெண் ஒருவர் கொல்லப்பட்டது. 11ம் தேதி போரோபெக்ரா பகுதியில் சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல், அதே தினத்தில் வீடுகளுக்கு தீ வைத்து மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் என 3 வழக்குகள் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டு உள்ளன. மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் என்ஐஏ விசாரணையை தொடங்கியுள்ளது.