காஷ்மீரில் காட்டாற்று வெள்ளம்: காப்பாற்றிய ராணுவத்துக்கு பாராட்டு Minor Boy rescued from flood in Ka
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச், அனந்த்நாக், ரஜோரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், அங்குள்ள முக்கிய நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரஜோரி ஆற்றில் வழக்கம் போல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆற்றங்கரையில் குளித்தும், பொழுது போக்கியும் மகிழ்ந்தனர். அப்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால், அனைவரும் அலறி அடித்து ஓடினர். ஆற்றுக்கு நடுவே இருந்த சிறிய நிலப்பகுதியில் ஒரு சிறுவன் சிக்கிக் கொண்டான். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், அந்த சிறுவனால் அங்கிருந்து வர முடியவில்லை. எனினும் தைரியத்துடன் அங்கேயே உதவிக்காக காத்திருந்தான். இதை பார்த்த ஊர் மக்கள் போலீஸ் மற்றும் ராணுவத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், ராணுவ வீரர்கள், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் என அனைத்து தரப்பினரும் இணைந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெள்ளத்தின் வேகம் குறையாததால், ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். காட்டாற்று வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் கடும் பதற்றத்தில் இருந்ததால், அவனிடம் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரிக்கவில்லை. சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவன் எதற்காக ஆற்றின் நடுவே சென்றான் என்ற விவரம் வெளியாகவில்லை. எனினும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை மீட்ட ராணுவத்தை மக்கள் வெகுவாக பாராட்டினர்.