சட்ட விரோத வெளிநாட்டு பணம் பெற்ற வழக்கில் கிடுக்கிப்பிடி | MLA Jawahirullah | One year imprisonment
1997 டிசம்பர் 15 முதல் 2000ம் ஆண்டு ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக 1.5 கோடி ரூபாய் பெற்றது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா மீது வழக்கு தொடரப்பட்டது. சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணையில் இருந்தது. விசாரணை முடிவில் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு ஓரண்டு சிறையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக், நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி முருகன், மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீட்டுக்காக தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.