4700 கிலோ வெடி பொருளுடன் லாரி: நாமக்கல் அருகே பரபரப்பு | Namakkal | Blasting gelatin
நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரங்காடு பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்திய போலீசார் ஆவணங்களை கேட்டனர். ஆவணங்களை தருவது போல வந்த லாரி டிரைவர் திடீரென அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். போலீசார் லாரியை ஆய்வு செய்த போது தக்காளிக்கு கூடைகளுக்கு இடையே 4700 கிலோ எடை கொண்ட ஜலட்டின் குச்சிகள், வெடி பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெடி பொருள் துறை நிபுணர்களுக்கு தகவல் அளித்து வரவழைத்தனர். லாரியில் கடத்தி வரப்பட்ட வெடிபொருட்களை பாதுகாப்பாக எடுத்து சென்று பரமத்தி வேலூர் அருகே உள்ள தனியார் வெடி மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைத்தனர். வெடிபொருள் கடத்தல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஈரோடு சித்தோடு பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் பார்த்திபனை தேடி பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரியை சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள், வெடி மருந்து விற்பனையாளர் மூலம் வெடி பொருட்களை வாங்கியுள்ளார். அவற்றை கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பதை ஒப்புக்கொண்டார். பார்த்திபன் சொன்ன தகவலை வைத்து வெடி மருந்து விற்பனையாளர்கள் கிருபாகரன்,ராஜேந்திரன், சுருளிராஜன்,அப்துல் லத்தீப், பழனிச்சாமி, ராமலிங்கம் ஆகியோரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர். வெடி மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 7 நபர்களையும் குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 4700 கிலோ வெடி மருந்து எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் தக்காளி கூடைகளுக்கு இடையே கடத்தப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.