4 தொழிலாளர் நலச்சட்டங்கள் அமல்: சாதக பாதகங்கள் என்ன?
இந்தியாவில் தொழிலாளர் நலனை காக்கும் வகையில் 29 தொழிலாளர் நலச் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. அந்த சட்டங்களை ஒருங்கிணைத்து, தொழிலாளர் நலனை மேம்படுத்தும் வகையில் நான்கு புதிய சட்ட தொகுப்புகளை மத்திய தொழிலாளர் நலத்துறை உருவாக்கியுள்ளது. அந்த புதிய 4 சட்டங்கள் நேற்றைய தினம் நவம்பர் 21ம் தேதி அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசின் அறிவித்துள்ளது. அமலுக்கு வந்துள்ள 4 சட்டங்களின் விவரம் வருமாறு: 1. ஊதியச் சட்டம் 2019 2. தொழில் உறவுகள் சட்டம், 2020 3. சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020 4. பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்டம், 2020 ஒவ்வொரு சட்டத்தின் நோக்கங்கள், பலன்கள் என்ன என்பதை பார்ப்போம். 1. குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்வது என்ற சட்டம், முன்பு குறிப்பிட்ட சில தொழில்களுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்தது. இனி, அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதை ஊதியச் சட்டம் உறுதி செய்கிறது, 2. தொழில் உறவுகள் சட்டம் தொழில் தகராறுகளைத் தீர்ப்பதற்கான செயல்முறைகளை எளிதாக்குகிறது. இதன்மூலம் தொழிலாளர், தொழில் நிறுவனம் இடையே உறவை மேம்படுத்தும் விதமாக, தொழில் உறவுகள் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 3. சமூகப் பாதுகாப்புச் சட்டம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), மாநில காப்பீடு (ESI), மகப்பேறு சலுகைகள், பணிக்கொடை உள்ளிட்ட 9 சமூக பாதுகாப்புச் சட்டங்களை உள்ளடக்கியதாகும். இது அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைவருக்கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது. 4. பணியிட பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்டம் பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. மொத்தத்தில், உகந்த பணிச்சூழலை உறுதி செய்வதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழமையான சட்ட விதிகளை எளிமைப்படுத்தி, மாறி வரும் நவீன பணிச்சூழலுக்கு ஏற்ப புதிய 4 தொழிலாளர் நலச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.