நீட் தேர்வு எழுதிய மாணவி போட்ட வழக்கில் திருப்பம் | Neet result | M.P Court stay | Power problem cl
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நாடு முழுதும் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடந்தது. நாடு முழுதும் 21 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு நடந்த அன்று, மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஏராளமான நீட் தேர்வு மையங்களில் 2 மணி நேரம் வரை பவர் கட் ஆனது. சில மையங்களில், மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேர்வு நடந்தது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவி, அம்மாநில ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்துார் பகுதியில், எனக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு நாளன்று இடி, மின்னல் காரணமாக எனது மையத்திலும் மின்சாரம் இல்லை. இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்தும், ஜெனரேட்டர் போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை. மின் தடை காரணமாக கவனம் சிதறியதோடு, தேர்வு எழுதும் திறனும் பாதித்தது. எனவே எனக்கு மீண்டும் நீட் தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த மனு, ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபோத் அபயங்கர், தேர்வின் போது, சரியான சூழலை மாணவ - மாணவிகளுக்கு அதிகாரிகள் வழங்கத் தவறி விட்டனர். இந்த மனு தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியும் எதிர் மனுதாரர்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு, மத்திய பிரதேச மாநில மேற்கு மண்டல மின் வினியோக நிறுவனம் 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 30க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்த விசாரணை வரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ளது. இப்போது ஜூன் 30 வரை தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டதால், நீட் தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுதும் நீட் தேர்வு எழுதிய 21 லட்சம் மாணவ மாணவிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.