சூடு பிடித்தது அமெரிக்க அதிபர் தேர்தல் களம் American Presidential Election
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், 81 வயதான அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர், 78 வயதான டெனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அந்நாட்டில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்புக்கு முன், இரு கட்சிகளை சேர்ந்த முன்னணி வேட்பாளர்கள் பொது மேடைகளில் விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். நேற்று நடந்த பொது விவாத நிகழ்ச்சியில், பைடன், டிரம்ப் இருவரும் காரசாரமாக விவாதித்தனர். இருவரின் பேச்சுக்களிலும் தனிமனித தாக்குதல்கள் அதிகம் இருந்ததாக விமர்சனம் எழுந்தது. இந்த விவாதத்தில் டிரம்ப் கேள்விகளுக்கு சரியான பதிலடி தர முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகிறது. இது, ஜனநாயக கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. வயது முதிர்வின் காரணமாக ஜோ பைடனால், டிரம்ப்பின் கேள்விகளுக்கு தடுமாற்றம் இன்றி பதில் அளிக்க முடியவில்லை என, ஜனநாயக கட்சி செனடர்களே சொல்கின்றனர். இந்த போக்கு தொடர்ந்தால், ஜனநாயக கட்சி ஆட்சியை தக்க வைப்பது சிரமமாகும் என்பதால், அதிபர் வேட்பாளரை மாற்றும் பேச்சும் கட்சிக்குள் எழுந்துள்ளது. பைடனுக்கு பதில், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செலை களம் இறக்க மூத்த நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். டிரம்ப்பை எதிர்த்து ஒரு பெண், அதுவும் கருப்பினத்தை சேர்ந்த ஒபாமாவின் மனைவி களம் இறங்குவது ஜனநாயக கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என, அக்கட்சியின் மூத்த செனடர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பராக் ஒபாமா, நேற்றைய விவாதம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், வரவிருக்கும் தேர்தல், சாதாரண மக்களின் குரலுக்காவும், அவர்களின் நலனுக்காகவும் உழைத்த ஒருவருக்கும், வாழ்நாள் முழுதும் தன்னை பற்றி மட்டுமே சிந்தித்த ஒருவருக்கும் இடையே நடக்கும் போட்டி என கூறியுள்ளார். அடுத்தடுத்த விவாதங்களில் பைடனின் செயல்பாடுகளின் அடி்ப்படையிலேயே அவர் அதிபர் வேட்பாளரா இல்லையா? என தெரிய வரும் என அமெரிக்க அரசியலில் பேசப்படுகிறது.