நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் பேசியது என்ன? | ADMK executives meeting | Edappadi Palanisamy
நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் பேசியது என்ன? | ADMK executives meeting | Edappadi Palanisamy | Lok sabha election | Chenna லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய, அதிமுகவின் தொகுதி வாரியான ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கி உள்ளது. முதலில் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு துவங்கிய கூட்டம் 6:30க்கு முடிந்தது. அதன்பின் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடந்தது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதி நிர்வாகிகள், தொகுதி வாரியாக தனித்தனியே அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும், பேச விரும்பும் நிர்வாகிகள் பேசலாம் என, பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். பெரும்பாலானோர் கட்சி தலைமையை புகழ்ந்து பேசினர். சிலர் மட்டும், தற்போதைய கட்சி நிர்வாகிகள், பழைய நிர்வாகிகளை மதிப்பதில்லை. இதனால், அவர்கள் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறினர். சிலர், கூட்டணி பலமாக அமையவில்லை. திமுக தரப்பில் மகளிருக்கு 1,000 ரூபாய் வழங்கியதை மையப்படுத்தி பிரசாரம் செய்ததாக சுட்டிக்காட்டினர். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, 1,000 ரூபாய் கொடுக்கச் சொன்னதே நாம்தான் என்பதை மக்களிடம் விளக்குங்கள். கட்சியில் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து செயல்படுங்கள் என்றார். ஒரு சிலர் முன்னாள் அமைச்சர் வளர்மதி மீது புகார் தெரிவிக்க, தனிப்பட்ட முறையில் புகார் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறப்பட்டது. இறுதியாக பழனிசாமி பேசுகையில், ஒன்றியம், நகரம், பேரூராட்சி அளவில், அடிக்கடி கூட்டம் நடத்துங்கள். மக்களுடன் அதிகம் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் நெருங்கி பழகுங்கள். நம் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறுங்கள். அடுத்த முறை பலமான கூட்டணி அமைக்க ஏற்பாடு செய்யப்படும். காஞ்சிபுரம் தொகுதியில் பெரிய அளவில் நம் ஓட்டு சதவீதம் குறையவில்லை. இப்போதிருந்தே தேர்தல் பணிகளை துவக்கினால், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம். இளைஞர்கள், இளம்பெண்களை கட்சிப் பணியில் அதிகம் ஈடுபடுத்துங்கள். தகவல் தொழில்நுட்ப அணியில் உள்ளவர்கள், சோசியல் மீடியாவில் வேகமாக செயல்படுங்கள். தோல்வியை மறந்து உழைப்போம். வரும் தேர்தலில் ஆட்சி அமைப்போம் என பேசியதாகவும் அவர்கள் கூறினர்.